
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே மொபைல் போனை பயன்படுத்தி வருகின்றனர். நாட்டில் தற்போது பிஎஸ்என்எல் எனும் பொதுத்துறை நெட்வொர்க்கும், ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய 3 தனியார் நெட்வொர்க்குகளும் இயங்கி வருகின்றன. சிம் கார்டு எண்ணை மாற்றாமல் நெட்வொர்க்கை மாற்ற வேண்டுமெனில், போர்ட்டபிலிட்டி வசதி உதவியாக இருக்கும். இதேபோல் தற்போது கேஸ் சிலிண்டரின் நிறுவனத்தையும் மாற்றிக் கொள்ளும் வசதி விரைவில் வரவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கேஸ் சிலிண்டர் இணைப்பை மாற்றிக் கொள்ளும் வசதி 13 மாநிலங்களில் உள்ள 24 மாவட்டங்களில் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டது. இந்த வசதியின் படி, பாரத் கேஸ் இணைப்பு வைத்துள்ள ஒரு வாடிக்கையாளர் நிறுவனத்தை மாற்றாமல் விநியோகஸ்தரை மட்டும் மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதியை அடுத்த ஆண்டே நாடு முழுவதும் விரிவுபடுத்தியது மத்திய அரசு.
இந்த வசதியில் தற்போது போர்ட்டபிலிட்டி எனும் புதிய வசதியைக் கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி இனி கேஸ் இணைப்பு எண்ணை மாற்றாமல், நிறுவனத்தை மாற்றிக் கொள்ள முடியும்.
பாரத் கேஸ் இணைப்பைப் பெற்ற வாடிக்கையாளர் ஒருவர், இனி இண்டேன் கேஸ் அல்லது எச்பி கேஸ் இணைப்புக்கு மாற முடியும். இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிக்கையில், “கேஸ் சிலிண்டரின் விலை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதால், வாடிக்கையாளர்கள் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் வசதியை அமல்படுத்த உள்ளோம்.
இது தொடர்பான கருத்துகளை நுகர்வோர்களும், விநியோகஸ்தர்களும் வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி வரை தங்கள் கருத்துக்களைக் கூறலாம். இதனடிப்படையில் எல்பிஜி போர்ட்டபிலிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, நாடு முழுவதும் அமலுக்கு வரும்.
கடந்த நிதியாண்டில் கேஸ் இணைப்புகளின் எண்ணிக்கை நாட்டில் 32 கோடியைக் கடந்தது. அதற்கேற்ப வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த புகார்களின் எண்ணிக்கையும் 18 இலட்சத்தைக் கடந்துள்ளது. கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் ஏற்படும் தாமதம் தான் பல வாடிக்கையாளர்களுக்கு பெருங்குறையாக உள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்களின் குறைகளைக் களைய ‘எல்பிஜி போர்ட்டபிலிட்டி’ எனும் புதிய வசதி அவசியம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் முக்கியம்?
நுகர்வோர் தங்களுக்கு விருப்பமான சிறந்த சேவையை வழங்கும் நிறுவனத்தை அல்லது விநியோகஸ்தரைத் (dealer) தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைக்கும்.
உள்ளூர் விநியோகஸ்தரிடம் ஏதேனும் செயல்பாட்டுச் சிக்கல்கள் ஏற்படும்போது, நுகர்வோர் அருகில் உள்ள வேறு எந்த விநியோகஸ்தரிடமிருந்தும் சிலிண்டர்களைப் பெற முடியும். இது விநியோகத் தாமதங்களைத் தடுக்கும்.
கேஸ் இணைப்பை மாற்றிக் கொள்ளும் வசதி விரைவில் அமலுக்கு வரவுள்ளது பொதுமக்களுக்கு நல்ல செய்தி தான். இருப்பினும் ஒவ்வொரு ஊரிலும் பல நிறுவனங்களின் கேஸ் இணைப்பு வசதி கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. பெட்ரோலிய நிறுவனங்கள் இதனையும் வாடிக்கையாளர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது அவசியம். இல்லையெனில் நிறுவனத்தை மாற்றுவதில் பயனில்லாமல் போகலாம்.
2013-14 ஆம் ஆண்டுகளில் சோதனை அடிப்படையில் (Pilot Portability) இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது நுகர்வோர் ஒரே எண்ணெய் நிறுவனத்திற்குள் மட்டுமே விநியோகஸ்தரை மாற்ற முடிந்தது. ஆனால், தற்போது PNGRB நிறுவனங்களுக்கு இடையேயான மாற்றத்தையும் (Inter-company portability) அனுமதிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் தேதி விரைவில் PNGRB ஆல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.