

இன்று (மே 1-ம்தேதி) முதல் ஓடிபி (OTP)அடிப்படையிலான சிலிண்டர் டெலிவரி முறையை 100% நடைமுறைக்குக் கொண்டு வர மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இனிமேல் நீங்கள் நினைத்த நேரத்தில் எல்லாம் சிலிண்டர் புக் செய்ய முடியாது. நகர்ப்புறங்களில் தற்போது ஒரு சிலிண்டர் புக் செய்த பிறகு, அடுத்த சிலிண்டருக்கு 25 நாட்கள் காத்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் இது 21 நாளாக இருந்தது. இதுவே ஊரகப் பகுதிகளில் 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடு முடிவதற்குள் சிலிண்டர் புக் செய்ய முயன்றால், ஆட்டோமேட்டிக் சிஸ்டம் மூலம் அந்த கோரிக்கை நிராகரிக்கப்படும்.
மத்திய கிழக்கில், குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான பதட்டங்கள், எரிசக்தி சந்தையை அழுத்தத்தில் வைத்திருக்கின்றன.இந்தச் சூழலில், இந்தியாவில் உள்ள எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) விலைகளைக் குறைக்குமா அல்லது மற்றொரு சுற்று விலை உயர்வுகளை அறிமுகப்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடங்கியதிலிருந்து எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 60 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. வணிக ரீதியிலான சிலிண்டர் விலையும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், இன்று (மே 1) மீண்டும் ஒரு விலை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே நாட்டின் சிலிண்டர் பதுக்கல்களைத் தடுக்கவும், கள்ளச்சந்தையில் விற்பனையை நிறுத்தவும், மக்களுக்கு முறையாக சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, எண்ணெய் நிறுவனங்கள் ஓடிபி (OTP) அடிப்படையிலான சிலிண்டர் டெலிவரி முறையை 100% நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே இது நடைமுறையில் இருந்தாலும் இனி கட்டாயம், மொபைலுக்கு ஓடிபி வந்த பிறகே சிலிண்டர் டெலிவரி செய்யப்படும். அந்த வகையில் தற்போது நாட்டில் 94 சதவீத அளவில் இருக்கும் இந்த நடைமுறையை முழுமையாகச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இனி பழையபடி ரசீது அல்லது புளூ புக்கை காட்டினால் மட்டும் சிலிண்டர் கிடைக்காது என்பதை இல்லத்தரசிகள் நினைவில் கொள்ள வேண்டும்.
வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்ததும், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். டெலிவரி செய்ய வரும் விநியோகஸ்தரிடம் அந்த OTP-ஐச் சொன்னால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும். இது டெலிவரி அங்கீகாரக் குறியீடு (Delivery Authentication Code - DAC) முறை என அழைக்கப்படுகிறது, இது போலி விநியோகத்தைத் தடுக்கிறது. இந்த ஓடிபி-யைப் பதிவு செய்தால் மட்டுமே சிலிண்டர் விநியோகம் முழுமையடைந்ததாக நிறுவனத்தின் கணினியில் பதிவாகும்.
இந்த புதிய மாற்றத்தின் மூலம் சிலிண்டர் திருட்டு மற்றும் கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவது முழுமையாகத் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விதிகள் மானியம் மற்றும் மானியம் அல்லாத அனைத்து வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் பொருந்தும்.
இன்று முதல் இந்த புதிய விதிமுறை நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.