

2025-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ (María Corina Machado), அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துத் தனது நோபல் பரிசுப் பதக்கத்தைப் பரிசாக வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு வெனிசுலாவில் ஜனநாயகம் மலரப் போராடியதற்காக மச்சாடோவுக்கு இப்பரிசு அறிவிக்கப்பட்டது. அப்போது முதலே இப்பரிசை டிரம்ப்பிற்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்திருந்த அவர், அண்மையில் வெள்ளை மாளிகையில் டிரம்ப்பைச் சந்தித்தபோது, "எங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்காக டிரம்ப் காட்டிய அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரம் இது," எனக் கூறிப் பதக்கத்தை வழங்கினார்.
அதிபர் டிரம்பும் நோபல் பரிசை தனக்கு வழங்கிய மச்சாடோவுக்கு சமூக வலைதள பதிவு மூலம் நன்றி தெரிவித்துள்ளார். “மரியா கொரினா மச்சாடோ அற்புதமானவர். பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளார். அவர் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை நான் மேற்கொண்ட பணிக்காக எனக்கு வழங்கினார். இதுவொரு பரஸ்பர மரியாதையின் மீதான அற்புத செயலாகும். மரியாவுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் தன்னை நோபல் பரிசுக்கு தகுதியானவர் எனப் பலமுறை கூறிவந்த நிலையில், இந்தச் சம்பவம் முக்கியத்துவம் பெற்றதாகிறது. டிரம்ப், தனது பதவிக்காலத்தில் போர்களை நிறுத்தியதற்காக நோபல் பரிசு பெற கோரினார். மேலும் ஒபாமாவிற்கு பரிசு கிடைத்தது பற்றியும் கடுமையாக விமர்சித்தார். ஆனால் டிரம்பின் செயல்கள் அமைதிக்கு உகந்ததல்ல என்றும், அவருக்கு நோபல் பரிசு அளிப்பது முறையல்ல என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
அண்மையில் எனது 2-வது ஆட்சி காலத்தில் 8 மாதத்தில் 8 போர்களை நிறுத்தியதால், நோபல் பரிசு பெற, வரலாற்றில் என்னைவிட தகுதியானவர் வேறு யாரும் இல்லை என டிரம்ப் நோபல் பரிசு குறித்து தனது விருப்பத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இப்போது அவர் மச்சாடோ மூலம் வசமாகியுள்ளது அவர் விரும்பிய நோபல் பரிசு என்பது கவனிக்கத்தக்கது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் நோபல் கமிட்டி தனது மறுப்பைத் தெரிவித்துள்ளது. "நோபல் பரிசு என்பது மற்றவர்களுக்குப் பகிரவோ, மாற்றவோ அல்லது திரும்பப் பெறவோ முடியாத ஒன்று" என நோபல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். இதற்கிடையில், கடந்த ஜனவரி 3-ஆம் தேதி வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தி, அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியது. வெனிசுலாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டத் தான் கடமைப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ள சூழலில், மச்சாடோவின் இந்தச் செயல் உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
வெனிசுலாவின் தற்போதைய அரசியல் நிலைமையில் அதன் எதிர்கட்சித் தலைவர் தனக்கு கிடைத்த நோபல் பரிசு டிரம்புக்கானது எனக் கூறியிருப்பது வெனிசுலாவின் ஆட்சியில் அமர்வதற்கான அச்சாரமாக இருக்குமா என்ற கருத்துக்கள் உலக அரசியல் வட்டாரத்தில் உலா வருகிறது.