

சமீபத்தில் வெளியான "தே தே பியார் தே 2" (De De Pyaar De 2) திரைப்படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு அப்பாவாக நடித்து அசத்தியிருக்கிறார் நம்ம 'மேடி' மாதவன்.
படத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்விலும் ஒரு அப்பாவாக தான் சந்திக்கும் சவால்கள் குறித்தும் மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
"அது வேற காலம்.. இது வேற காலம்!"
இந்தப் படத்தின் கதை ஏன் இப்போதைய ட்ரெண்டிற்குப் பொருத்தமாக இருக்கும் என்பதற்கு மாதவன் சொல்லும் காரணம் இதுதான்:
"அந்தக் காலத்துல சில உறவுகளை நினைச்சாலே சமூகம் தப்பா பார்க்கும். ஆனா இப்போ காலம் மாறிடுச்சு. காதலர்களுக்குள்ள இருக்கற வயசு வித்தியாசம் எல்லாம் இன்னைக்கு பெரிய விஷயமே இல்ல.
ஆனா, நம்ம வீட்ல இருக்கற பழைய சிந்தனை கொண்ட பெரியவங்களுக்கு இதெல்லாம் ஏத்துக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். அத அழகா சொல்ற படம் இது."
ஒரு 'மாடர்ன் அப்பா'வாக மாறுவது கஷ்டம்!
சொந்த வாழ்க்கையில் தன் மகனை வளர்ப்பது பற்றிப் பேசிய மாதவன், ஒரு முக்கியமான விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்.
"உண்மையைச் சொல்லணும்னா, ஒரு நவீன கால அப்பா (Modern Father) எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வது எனக்கு ஆரம்பத்தில் மிகக் கடினமாக இருந்தது," என்று தன் மனதிலிருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "எங்க அப்பா அம்மா என்னை வளர்த்த விதம், அவங்க செய்த தியாகங்கள் மேல எனக்கு பெரிய மரியாதை இருக்கு.
அதுக்காக நான் அவங்க மேல உயிரே வெச்சிருக்கேன். ஆனா... அதே ஃபார்முலாவை வெச்சுக்கிட்டு என் பையனை நான் வளர்க்க முடியாது! அப்படி வளர்த்தா அவன்கிட்ட எடுபடாது.
என் பெற்றோர்கள் என்மேல செலுத்தின அதே தாக்கத்தை நானும் என் பையன் மேல செலுத்தணும்னா, நான் எனக்கான 'Parenting Rules'-ஐ மாத்தித்தான் ஆகணும்," என்று எதார்த்தத்தைப் போட்டு உடைத்துள்ளார்.
ரசிகர்களுக்கு ஒரு சின்ன க்ளூவும் கொடுத்திருக்கிறார் மாதவன்.
"உங்கள் குடும்பத்திலும் இதேபோன்ற ஒரு சூழல் எதிர்பாராமல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை அப்படி நடந்தால், அதை எப்படிச் சமாளிப்பது என்பதற்கான ஒரு தீர்வையும் இந்தப் படம் சொல்கிறது.
இதுதான் படத்தைப் பார்க்க இன்னொரு முக்கியக் காரணம்." என்று கூறினார்.
அஜய் தேவ்கன் என்ன சொல்றாரு?
மாதவனுடன் நடித்த அஜய் தேவ்கனும் இன்றைய தலைமுறை பற்றிப் பேசும்போது,
"இன்றைய இளைஞர்கள் ரொம்ப தெளிவு. அவங்க வாழ்க்கை முடிவை அவங்களே தான் எடுக்குறாங்க.
அதை நாம தடுக்கவோ, எதிர்க்கவோ முடியாது. இதுல யார் சரின்னு சொல்ல முடியாது. ரெண்டு பக்கமும் நியாயம் இருக்கு.
இந்தத் தலைமுறை இடைவெளி (Generation Gap) மோதல்கள் தான் படத்தோட சுவாரஸ்யமே!" என்று கூறியுள்ளார்.
மொத்தத்தில், ஒரு ஜாலியான அதே சமயம் இன்றைய பெற்றோர்கள் சிந்திக்க வேண்டிய விஷயத்தையும் பேசியிருக்கிறார்கள் இந்த ஸ்டார்ஸ்!