

திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் பெற்ற வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில், பதில் மனு அல்லது நிராகரிப்பு மனுவை ஆகஸ்ட் 27-க்குள் தாக்கல் செய்யத் தவறினால் ₹50,000 அபராதம் விதிக்கப்படும் என, தமிழக முதல்வர் விஜய் மற்றும் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வழக்கின் பின்னணி :
பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி: பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதல் அமைச்சர் விஜய் அவர்களின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி, அத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மேலும், அதே தொகுதியை சேர்ந்த வாக்காளர்களான தினேஷ் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தனியாக தேர்தல் வழக்குகளை தொடுத்துள்ளனர்.
திருச்சி கிழக்குச் சட்டப்பேரவைத் தொகுதி: இதேபோன்று திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக முதல் அமைச்சர் விஜய்யின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு தாக்கல் செய்தார்.
பொதுப்பணித் துறை அமைச்சர் வழக்கு: இதே வழக்குகளின் தொடர்ச்சியாக, தமிழகப் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களின் வெற்றியை எதிர்த்தும் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் அமர்வில் இவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தபோதே, வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86-வது பிரிவின்படி 6 மாதங்களுக்குள் தேர்தல் வழக்குகளை முடிப்பது அவசியம் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, கூடுதல் அவகாசம் தர மறுத்தார்.
விசாரணையின் போது, முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரி பதில் மனுக்களை தாக்கல் செய்யத் தயார் நிலையில் இருப்பதாகவும், அதற்கு இரண்டு வார காலம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
வழக்கறிஞர்களின் இந்த கோரிக்கையை ஏற்க நீதிபதி வி. லட்சுமிநாராயணன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (Representation of the People Act) பிரிவு 86-ன் படி, தேர்தல் வழக்குகளின் விசாரணையை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் முடிப்பது சட்டப்பூர்வ விதியாகும் என்பதை சுட்டிக்காட்டினார்.
ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் பதில் மனு அல்லது நிராகரிப்பு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் ₹50,000 அபராதம் செலுத்த நேரிடும் எனவும் எச்சரித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பினர் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் தங்கள் தரப்பு பதில் மனுவையோ அல்லது வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரும் நிராகரிப்பு மனுவையோ தாக்கல் செய்ய வேண்டும்.குறிப்பிட்ட இந்தக் கெடு தேதிக்குள் மனுத் தாக்கல் செய்யப்படவில்லை என்றால், ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.