மதுரையில் புதிய ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்: இனி அரை மணி நேரத்தில் கொடைக்கானல் செல்லலாம்!

மதுரையில் புதிய ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்!: ராமேஸ்வரம் 30 நிமிடம், சென்னை 1.10 மணி நேரம் - வி.ஐ.எல் ஏவியேஷன் அசத்தல்!
மதுரையில் ஹெலிகாப்டர் சேவை
மதுரையில் ஹெலிகாப்டர் சேவைSource:DTnext
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

மதுரையில் சுற்றுலாவை மேம்படுத்தவும், அவசரக்கால மருத்துவ சேவையை விரைவுப்படுத்தவும் புதிய ஹெலிகாப்டர் செயல்பாட்டு சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. வி.ஐ.எல் (VIL) ஏவியேஷன் நிறுவனம் மதுரையில் தனது ஹெலிகாப்டர் சேவையைத் தொடங்கியுள்ளது.

இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு சுற்றுலா தலத்திற்கும் அல்லது புனித யாத்திரை தலத்திற்கும் மதுரையிலிருந்து விமானத்தில் பயணம் செய்வது சாத்தியமாகியுள்ளது. தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கே. ஹரி தியாகராஜன், மதுரை விமான நிலையம் அருகே நகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைந்துள்ள தனது செயல்பாட்டுத் தளமான வி.ஐ.எல் ஹெலி நிலையத்தை திறந்து வைத்தார்.

மதுரை ஒரு சுற்றுலா மையமாக இருப்பதால் ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு விரைவாகச் சென்று வர விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கும், யாத்ரீகர்களுக்கும் இந்த புதிய சேவைகள் உதவும். ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்ய இனி சுமார் அரை மணி நேரமே ஆகும். இந்த ஹெலிகாப்டர் சேவையானது அவசரத் தேவை நிலைகளை பூர்த்தி செய்ய உதவும். இதில் 5 பயணிகள் வரை பயணிக்கலாம். இந்த சேவையைப் பெற 45 நிமிடங்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். பயணிகளுக்கு காத்திருப்பு கட்டணம் எதுவும் இல்லை. அதாவது ஒரு குடும்பம் கொடைக்கானலுக்குப் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்வதாக வைத்துக் கொண்டால், அவர்களை சேரும் இடத்தில் இறக்கிவிட்டு அங்கே காத்திருப்பதும், அந்த காத்திருக்கும் நேரத்திற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

மதுரையை மையமாகக் கொண்டு ராமேஸ்வரம், கொடைக்கானல், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்கான தனியார் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்செந்தூருக்கு விமானப் பயண நேரம் 20 நிமிடங்கள், ராமேஸ்வரத்திற்கு 30 நிமிடங்கள், கோயம்புத்தூருக்கு 30 நிமிடங்கள் மற்றும் சென்னைக்கு 1.10 மணி நேரம் ஆகும். மதுரை வளர்ந்து வரும் சுற்றுலா நகரமாக உள்ளதால், அதை மையமாகக் கொண்டு மேற்பட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்கான தனியார் ஹெலிகாப்டர் சேவை நேற்று தொடங்கப்பட்டது.

பெங்களூருக்கு ஒன்றரை (1 1/2) மணி நேரத்தில் செல்லும் வசதியும் உள்ளது. அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி உண்டு. ஒரு மணி நேரம் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும், இதில் 5 பேர் வரை பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மையம் மூலம் மருத்துவம், அவசரக் கால சேவைகள், வணிகப் பயணங்கள், பெரு நிறுவனத் தேவைகள் மற்றும் சுற்றுலா சார்ந்த ஹெலிகாப்டர் சேவைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாவை மேம்படுத்த வழிபாட்டுத் தலங்களுக்கு இந்த ஹெலிகாப்டர் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு குடும்பம் கொடைக்கானலுக்குப் பயணத்தை முன்பதிவு செய்துள்ளது.

helicopter service
helicopter service source:thehindu

மேலும் விஐஎல் ஏவியேஷன் நிறுவனம் விரைவில் மதுரை நகரச் சுற்றுலாவை மலிவு விலையில் அறிமுகப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. மதுரையில் உள்ள செயல்பாட்டுத் தளத்தில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு மையம் ஒன்று திறக்கப்படும் என்றும், அது பிற்காலத்தில் விமானப் போக்குவரத்துப் படிப்புகளைப் பயிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஹெலி நிலையத்தில் விஐபி ஓய்வறை, பயணிகள் காத்திருக்கும் பகுதி, சிற்றுண்டி சாலை மற்றும் பிற வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. விமான சேவைகள் குறைவாக உள்ள நிலையில் அவசரக்கால உதவிகள், வணிகம், சுற்றுலா மற்றும் புனித யாத்திரை போன்றவற்றிற்கு ஹெலிகாப்டரை பயன்படுத்தலாம் என்றும், இதனால் நேரம் மிச்சமாகும் என்றும் கூறப்படுகிறது. மலைப்பகுதிகளிலும், மோசமான வானிலையின் பொழுதும் ஹெலிகாப்டரை கையாளக்கூடிய அனுபவம் மிக்க விமானிகள் இருப்பதால் ஹெலிகாப்டர் பயணம் பாதுகாப்பானது என்று அந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

விஐஎல் ஏவியேஷன் நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 600 ஹெலிபேடுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளதால், பார்வையிட குறிக்கப்பட்ட இடத்திற்கு மிகவும் அருகில் ஹெலிகாப்டர்களை தரையிறக்க முடியும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்:
மணப்பட்டி சமையல்: ஒரு கிராமமே சமையற்கலைஞர்களாக மாறிய ஆச்சரிய வரலாறு!
மதுரையில் ஹெலிகாப்டர் சேவை
logo
Kalki Online
kalkionline.com