

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்டபந்தன (சொர்ண பந்தன) மகா கும்பாபிஷேகம் தமிழ் ஓதுவார்கள் பாட மிக விமரிசையாக நடைபெற்றது.
மதுரையில் உள்ள உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கோவிலில் கடந்த 2009-ம் (17 ஆண்டுகளுக்கு முன்) ஆண்டு ஏப்ரல் 8-ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பொதுவாக கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதியாகும்.
இதனால் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு இதற்காகச் சுமார் ₹32.29 கோடி செலவில் பல மாதங்களாக ராஜகோபுரம் உள்பட கோவிலின் அனைத்து இடங்களிலும் 186 திருப்பணிகள் (கோபுரங்கள் மற்றும் மண்டபங்கள் சீரமைப்பு) செய்யப்பட்டுள்ளன. இந்த திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் தயார் ஆனது.
அதையெட்டி கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாக பூஜை கடந்த 11-ம்தேதி தொடங்கியதுடன் 400-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களால் இந்த பூஜைகள் நடத்தப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லட்சுமி, பத்திரகாளி, 63 நாயன்மார்கள் உள்ளிட்ட 414 பரிவார தெய்வங்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 17-ம்தேதி) அதிகாலை 4 மணி அளவில் 12-ம் கால யாக பூஜை நடைபெற்றது.
பின்னர் காலை 5.45 மணியளவில் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தமிழ் ஓதுவார்கள் பாட, காலை 7.40 மணிக்கு ராஜகோபுரங்கள், தங்க விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகமும், மூலவர் சன்னதிக்கு 8.10 மணிக்கும், 8.40 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கும், 8.50 மணிக்கு சுந்தரேசுவரருக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தைக் காணக் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் ‘சிவ சிவ’ கோஷம் விண்ணதிரச் செய்தது.
இந்த விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆன்மிகப் பெருவிழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்திருந்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 5 டன் மலர்களால் கோவில் கோபுரங்கள், பிரகாரங்கள், மூலவர் சன்னதிகள், கொடிமரங்கள் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதியம் கோவில் நடை சாத்தப்படாமல் காலை 10 மணி முதல் பொதுமக்கள் தொடர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு 2 லட்சம் பிரசாத பைகள் ( மஞ்சள், குங்குமம், விபூதி, தண்ணீர், பிஸ்கட்) வழங்கப்பட உள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி, திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக மாநகராட்சியின் மூலம் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 58 இடங்களில் வாகன நிறுத்த வசதிகளும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக 6,000-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முக அடையாளம் காணும் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிக விமரிசையாக நடைபெற்ற அஷ்டபந்தன (சொர்ண பந்தன) மகா கும்பாபிஷேகம்...
சொர்ண பந்தன மகாகும்பாபிஷேகம் என்பது இந்து ஆலயங்களில் கருவறையில் உள்ள மூலவர் சிலை (விக்ரகம்) மற்றும் அதன் பீடத்தை நிலைநிறுத்துவதற்காக, தங்கம் கலந்த கலவையைப் பயன்படுத்தி நடத்தப்படும் மிகவும் உன்னதமான ஒரு புனித சடங்காகும்.
சாதாரண கும்பாபிஷேகங்களின் போது 'அஷ்டபந்தனம்' என்னும் எட்டு பொருட்கள் கொண்ட மருந்து கலவை பயன்படுத்தப்படும். ஆனால், சொர்ண பந்தன கும்பாபிஷேகத்தில் மூலவர் சிலையின் பீடத்தைச் சுற்றி தூய தங்கம் (சொர்ணம்) உருகி ஊற்றப்பட்டு விக்ரகம் அசைவின்றி நிலைநிறுத்தப்படுகிறது.
சாதாரண கும்பாபிஷேகத்தை விட, சொர்ண பந்தனத்துடன் செய்யப்படும் மகாகும்பாபிஷேகத்தை தரிசிப்பது கோடி புண்ணியங்களைத் தரும் மற்றும் குடும்பத்திற்கு அஷ்ட ஐஸ்வரியங்களையும் வழங்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல பழமையான சிவாலயங்கள் மற்றும் அம்மன் கோவில்களின் திருப்பணிகளின் போது இத்தகைய சொர்ண பந்தன மகாகும்பாபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.