

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில்(அலகாபாத்) மகாமேளா நேற்று (03.01.26) கோலாகலமாகத் தொடங்கியது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த ஆன்மீகத் திருவிழா கங்கை, யமுனை மற்றும் அந்தர்வாகினியான (மறைந்திருக்கும்) சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி தொடங்கியுள்ள இந்த நிகழ்வு பிப்ரவரி 15-ஆம் தேதி வரை மொத்தம் 44 நாட்கள் நீடிக்க உள்ளது.
மகாமேளா காலத்தில் புனித நதியான கங்கையிலும், திரிவேணி சங்கமத்திலும் நீராடுவது மக்களின் பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகம். இதனால், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் திரண்டுள்ளனர். நேற்று காலை 10 மணி வரை மட்டும் சுமார் 9 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.
பக்தர்களின் வசதிக்காகச் சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் 10 நீராடும் படித்துறைகளும், 9 மிதவைப் பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மகாமேளா குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது எக்ஸ் (X) தளத்தில், "புனித யாத்திரைத் தலங்களின் அரசனான பிரயாக்ராஜுக்கு வருகை தந்துள்ள துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் அனைவருக்கும் அன்பான வரவேற்புகள். கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி அன்னையர் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றட்டும்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாமேளாவில் பௌஷ் பூர்ணிமாவைத் தவிர மகர சங்கராந்தி(ஜனவரி 14),மௌனி அமாவாசை(ஜனவரி 18),வசந்த பஞ்சமி(ஜனவரி 23), மகா சிவராத்திரி(பிப்ரவரி 15) ஆகியவை முக்கிய நீராடல் தினங்களாக கருதப்படுகிறது.