கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏறிக்கோடு வதச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள், தெரு நாய்களை விரட்டும் 'மந்திரக் கோல்' என்ற மின்னணு சாதனத்தை உருவாக்கி, தேசிய விருதை வென்றுள்ளனர். பி. அபிஷேக், வி.பி. நிஹால் மற்றும் சாதின் முகமது சுபைர் ஆகிய இந்த மாணவர்கள், தங்கள் இயற்பியல் ஆசிரியர் கே. பிரகீத் வழிகாட்டுதலின் கீழ் இந்த புதுமையான கருவியைக் கண்டறிந்துள்ளனர்.
சமீபக்காலமாக இந்தியாவில் தெரு நாய்கள் பிரச்சனை அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் பற்றிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
விலங்குகள் நல ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கருத்து வேறுபாடுகளை உருவாக்கிய இந்தத் தீர்ப்புகள், இனி தெரு நாய்களைப் பொது இடங்களில் தனிப்பட்ட முறையில் பராமரிக்க முடியாது எனத் தெளிவாக அறிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள், தெரு நாய்களுக்கு உணவு அளிப்பதற்கான குறிப்பிட்ட பகுதிகள், விதிமீறல்களுக்கான அபராதம் மற்றும் விலங்குகளைத் தத்தெடுப்பது குறித்த வழிமுறைகள் ஆகியவையாகும். இதன் மூலம், தெரு நாய்கள் தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் கொண்டுவர உச்ச நீதிமன்றம் முயன்றுள்ளது.
இப்படியான நிலையில் கேரளா அரசு பள்ளி மாணவர்கள் ஒரு புது சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சாதனம், ஒரு சுவிட்சை அழுத்தும்போது நாய்களுக்கு மட்டுமே கேட்கும் மீயொலி அலையையும் (Ultrasonic sound) ஒரு லேசான மின் அதிர்ச்சியையும் உருவாக்குகிறது. இந்த மீயொலி அலை நாய்களுக்கு மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும், அதே சமயம் மனிதர்களுக்குக் கேட்காது. இந்த எளிமையான ஆனால் பயனுள்ள கண்டுபிடிப்பு, டெல்லியில் நடைபெற்ற ஒரு தேசிய கண்டுபிடிப்பு மாரத்தான் போட்டியில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட யோசனைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 27 கண்டுபிடிப்புகளில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது.
இந்த வெற்றிக்கு அங்கீகாரமாக, மாணவர்களுக்கு அவர்களின் கண்டுபிடிப்பை வணிகமயமாக்குவதற்காக ரூ. 50,000 பரிசு வழங்கப்பட்டது. மேலும், சந்தையில் சாதனத்தை அறிமுகப்படுத்துவதற்கான பயிற்சியையும் மாணவர்கள் பெற்றுள்ளனர். தற்போது, இந்த சாதனத்திற்கு காப்புரிமை பெறுவதற்கும், அதை ஒரு தொழிலாகத் தொடங்குவதற்கும் மாணவர்களும் ஆசிரியரும் முயற்சித்து வருகின்றனர். அவர்களின் இந்த அரிய சாதனை, தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் கிராமப்புற மாணவர்களின் திறனை வெளிப்படுத்துகிறது.