

நாட்டில் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி அடைந்திருப்பது, பல்வேறு துறைகளில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் தொழில்நுட்பத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி சிலர் கலப்படம் மற்றும் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது பல ஆண்டுகளாகவே இருந்து வரும் முக்கிய பிரச்சினையாகும். இந்த விவகாரத்தில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிலும், கலப்படப் பொருட்களைத் தயாரிப்பது மட்டும் நின்ற பாடில்லை.
தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தைகள் குடிக்கும் பாலில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்த 6 மாதங்களாக கலப்பட பால் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல முக்கிய பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலப்படப் பாலைப் பருகினால், கல்லீரல் மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
பொதுவாக தரமான பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்ய வேண்டுமெனில் அதனைப் பதப்படுத்துவது அவசியம். அப்போது தான் பால் 3 முதல் 4 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு மோசடி கும்பல், 100 லிட்டர் இயற்கையான பாலில் 10% வரை செயற்கையான கலப்பட பாலைக் கலந்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் இருக்கும் பூம் தாலுகாவில் கலப்பட பால் செய்யும் மெகா மோசடி கும்பலை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பால் கடந்த 6 மாதங்களாக மகாராஷ்டிராவில் உள்ள புனே, ஜல்னா, அகில்யானகர், சோலாப்பூர், தானே மற்றும் ஜல்கான் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், தரமற்ற பால் பவுடருடன் துணி துவைக்கத் தேவைப்படும் டிடர்ஜெண்ட் மற்றும் சமையலில் பயன்படும் பாமாயில் கொண்டு செயற்கையாக பால் தயாரிக்கப்பட்டிருப்பது தான்.
இந்தப் பாலை குழந்தைகள் பருகினால், அவர்களின் உடல்நலன் பாதிக்கப்படுவது உறுதி எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காவல்துறை, உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இணைந்து கலப்பட பால் தொடர்பான சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
செயற்கை கலப்பட பால் விவகாரம் தொடர்பாக தற்போது வரை 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு இதில் தொடர்புடைய சில பால் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காவல் துறை விசாரணையின் போது, கிட்டத்தட்ட 2,30,470 கிலோ தரம் குறைந்த பால் பவுடர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 2.3 கோடி லிட்டர் அளவுக்கு கலப்பட பால் சந்தையில் விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாலை விரும்பிக் குடிப்பதால், கலப்பட பால் விவகாரம் மகாராஷ்டிராவில் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, தக்க தண்டனை வாங்கித் தர போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கலப்பட பால் விநியோகத்தால் பெற்றோர்கள் பீதியடைந்துள்ள நிலையில், குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலை வாங்குவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் மருத்துவர்கள் அறிவுரைத்துள்ளனர்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.