இன்று முதல் 2 மாதங்களுக்கு மோனோ ரெயில் சேவை நிறுத்தம்..!

Mono train
Mono trainimage source : Vikatan.com
Published on

இந்தியாவில் மும்பையில் மட்டும் தான் மோனோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. மும்பை செம்பூரில் இருந்து ஜேக்கப் சர்க்கிள் வரை இந்த மோனோ ரயில் இயக்கப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் மோனோ ரயில் சேவை வழங்கப்படவில்லை. அங்கு தான் மோனோ, மெட்ரோ, புறநகா் ரயில் உள்ளிட்ட 3 வகையான ரயில் சேவைகள் உள்ளன.

மும்பை மோனோ ரயில் (சந்த் கத்கே மஹாராஜ் சவ்க் - செம்பூர் வரை) கடந்த ஆண்டுகளில் செயல்பாட்டில் பல தடைகளையும் சவால்களையும் எதிர்கொண்டது. இந்த ரெயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதாகி நடுவழியில் நிற்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த மாதம் 19-ந் தேதி பலத்த மழையின் போது மற்ற ரயில் மற்றும் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டதால் மோனோ ரயிலில் பயணிகள் கூட்டம் திடீரென அதிகரித்தது.

இதன் காரணமாக மோனோ ரயில் நடுவழியில் நின்றுவிட்டது. மைசூர்காலனி அருகில் மோனோ ரெயில் பழுதாகி அந்தரத்தில் நின்றது. அப்போது ரெயிலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தானியங்கி கதவுகளை திறக்க முடியவில்லை. இதனால் அதில் சிக்கிய 582 பயணிகள் நீண்ட போராட்டத்துக்கு பிறகு கதவுகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதேபோல, கடந்த 15-ந்தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரெயில் நடுவழியில் அந்தரத்தில் நின்றது. இதனால் அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். நடுவழியில் ரெயில் அந்தரத்தில் நின்றதால் செய்வது அறியாது திகைத்தனர்.இதையடுத்து, பயணிகளை மீட்பதற்காக மற்றொரு மோனோ ரெயில் வரவழைக்கப்பட்டது. அந்த ரெயில் பழுதாகி நின்ற மோனோ ரெயில் அருகில் நிறுத்தப்பட்டது. இரு ரெயில்களின் வாசல்களுக்கும் இடையே பலகை மூலம் பாதை உருவாக்கப்பட்டு, பயணிகள் மீட்பு ரெயிலில் பத்திரமாக ஏற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள ரெயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.

இந்நிலையில், மோனோ ரெயிலில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் நோக்கில், அதன் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோனோ ரெயில் சேவை இன்று முதல் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.

மோனோ ரயில் சேவை மூலம் ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் முதல் 13 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைக்கிறது. ஆனால், கடந்த நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.250 கோடி செலவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம் - கிஸ் -  'காதல், காதல், காதல்'
Mono train

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com