
மகாராஷ்டிராவில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை 24 மணி நேரமும் செயல்பட மாநில அரசு சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. ஆனால் இந்த அனுமதி மதுபானக்கடைகளுக்கு பொருந்தாது.
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் 24 மணி நேரமும் செயல்பட மாநில அரசிடம் அனுமதிக்கக் கேட்டு தொடர்ந்து கோரிக்கையை வைத்து வந்தனர். இவை இரவில் இயங்க அரசின் முறையான அனுமதி இல்லாததால் இரவில் இயங்கும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவறவைக்கு போலீஸாரும், உள்ளாட்சி அமைப்பினரும் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் குற்றச்சாட்டு இருந்து வந்தது. இவற்றின் மீது சில நேரங்களில் சட்ட நடவடிக்கைகள் கூட எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும் செயல்பட அனுமதி கொடுப்பது தொடர்பாக சமீபத்தில் மாநில அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாநில அரசு பிறப்பித்துள்ள சமீபத்திய புதிய ஆணையின்படி மதுபானக் கடைகளைத் தவிர இதர வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் எந்த வித நேரக் கட்டுப்பாடும் இல்லாமல் 24 மணிநேரமும் செயல்பட வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. மால்கள், கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சேவை வழங்கும் நிறுவனங்கள் உட்பட மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்பட சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் அந்த உத்தரவில் தொழிலாளர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும், ஒவ்வொரு ஊழியருக்கும் வாரம் ஒரு முறை தொடர்ச்சியான 24 மணிநேரம் விடுமுறை கொடுக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி மற்றும் விருப்பமான நேரத்தில் செயல்படவும் ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 24 மணி நேர வணிக நாள் நள்ளிரவில் தொடங்கி சுழற்சியாக வரக்கூடியது என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மும்பை, புனே மற்றும் நாக்பூர் போன்ற நகரங்களில், இரவு நேர ஷாப்பிங், சேவைகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசின் இந்த நடவடிக்கை வணிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக உள்ளது.
மேலும் தனியார் நிறுவனங்களில் ஊழியர்களின் பணி நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக அதிகரிக்கும் திட்டமும் அமைச்சரவையின் பரிசீலனையில் இருக்கிறது. இத்தகவலை மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு பெண்களும் இரவு நேரத்தில் பணியாற்ற முடியும். இதற்கு முன்பு 2017ம் ஆண்டு பெர்மிட் ரூம்கள், பீர் பார்கள், டான்ஸ் பார்கள், ஹூக்கா பார்லர்கள், டிஸ்கோ கிளப்கள் மற்றும் ஒயின் ஷாப்கள் போன்ற மதுபானம் வழங்கும் வர்த்தக நிறுவனங்களின் பணி நேரத்தை நிர்ணயித்து அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தொடக்கத்தில் திரையரங்குகளும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன, ஆனால் அவை செயல்படும் நேரம் 2020ம் ஆண்டு தனி அறிவிப்பு மூலம் திருத்தி அமைக்கப்பட்டது. அரசின் இந்த புதிய அறிவிப்பால் எதிர்வரும் தீபாவளி நேரத்தில் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்கலாம். எனவே இச்செய்தி பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது.