

குறைந்த செலவில் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ள ரயில் போக்குவரத்து தான் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்பெல்லாம் ரயில் டிக்கெட் முன்பதிவின் போது வயது வித்தியாசமின்றி கீழ் மற்றும் மேல் பெர்த்கள் ஒதுக்கப்பட்டு வந்தன. மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மேல் பெர்த் ஒதுக்கப்பட்டு விட்டால், அவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இதனைக் கருத்தில் கொண்டு இனி மூத்த குடிமக்களுக்கு எப்போதும் கீழ் பெர்த் தான் ஒதுக்கப்படும் என ரயில்வே துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் பெர்த் விதிகளில் மிக முக்கிய மாற்றத்தை ரயில்வே துறை கொண்டு வந்துள்ளது. இதன்படி மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ் பெர்த் கிடைப்பது உறுதியாகி உள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவின் போது பெர்த் ஆப்ஷனை கிளிக் செய்வது அவசியம். நீங்கள் கிளிக் செய்யும் பெர்த் காலியாக இருந்தால், இடம் ஒதுக்கப்படும். காலியாக இல்லாத பட்சத்தில் எந்த பெர்த் காலியாக உள்ளதோ, அதுதான் ஒதுக்கப்படும். இந்நிலையில் மூத்தக் குடிமக்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ் பெர்த்தை ஒதுக்குவதில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது இநதியன் ரயில்வே.
சமீபத்தில் ரயில்வே துறை ‘ரயில் ஒன்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலியின் மூலம் ரயில் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு மற்றும் பெர்த் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்படும். இதன்படி இனி வயது முதிர்ந்த மூத்தக் குடிமக்கள், 45 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டு தானாகவே கீழ் பெர்த் ஒதுக்கப்படும்.
ஒருவேளை மேல் மற்றும் நடுப்பகுதி பெர்த் மூத்தக் குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்டால், காலியாக இருக்கும் கீழ் பெர்த்தை அடையாளம் கண்டு டிக்கெட் பரிசோதகர் மூத்தக் குடிமக்களுக்கு ஒதுக்குவார். இதற்கான அனுமதி தற்போது டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படி ஒதுக்கப்படும் பெர்த்களில் மூத்தக் குடிமக்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்க முடியும். மீதமிருக்கும் நேரத்தில் பயணிகளுக்கு அமரும் இடங்கள் ஒதுக்கப்படும்.
RAC-யில் பக்கவாட்டு கீழ் பெர்த் ஒதுக்கப்பட்ட பயணிகள், பக்கவாட்டு மேல் பெர்த்தில் உள்ளவர்கள் மற்றும் RAC பயணிகளுடன் பகல் நேரப் பயணத்தில் அமர்வதற்கு இடத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான 8 மணி நேரத்திற்கு கீழ் பெர்த்தில் உள்ள பயணிகளுக்கு உறங்கும் நேரம் என்பதால், மேல் பெர்த்தில் உள்ள பயணிகளுக்கு கீழ் பெர்த்தில் எவ்வித உரிமையும் இருக்காது.
சௌகரியமான பயணத்தை உறுதி செய்யவும், அனைவருக்கும் உறங்குவதற்கு சரியான பெர்த் கிடைப்பதை உறுதி செய்யவும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மாற்றத்தின் மூலம் பயணிகளின் சிரமங்கள் அனைத்தும் குறைந்து, அனைவருக்கும் சமநிலையான டிக்கெட் முன்பதிவு செயல்முறை கிடைக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.