
சென்னையில் புறநகர் ரயில் சேவைகளை பயன்படுத்தி வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் முக்கிய வழித்தடமான சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில், சென்னை வாசிகள் பலரும் தினந்தோறும் பயணித்து வருகின்றனர்.
இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையில் மட்டுமே 4 வழிப் பாதைகள் உள்ளன. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை நான்கு வழிப் பாதைகளை அமைத்து தர வேண்டி பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை எடுத்து வந்தனர். ரயில்வே துறையால் இதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தாம்பரம் டூ செங்கல்பட்டு இடையே நான்காவது பாதைக்கு ஒப்புதல் அளித்துள்ளார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
30.02 கி.மீ. தொலைவுக்கு 4வது ரயில் பாதை அமைக்க ரூ.713.56 கோடி செலவாகும் என்றும், திட்டம் முடியும்போது மொத்த மதிப்பீடு ரூ.757.18 கோடி எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை தற்போது மூன்று ரயில் பாதைகளே உள்ளன. இதனால் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் விரைவு மற்றும் மின்சார ரயில்கள், தாமதமாக செல்கின்றன. இதனால் நான்காவது ரயில் பாதை அமைத்தால் ரயில்களின் தாமதத்தைத தவிர்க்க முடியும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையில் நான்காவது ரயில் பாதைக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துவிட்டது.
வெகு விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு, நான்காவது ரயில் பாதை அமைக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஆற்றல், தாது மற்றும் சிமென்ட் போக்குவரத்து வழித்தடத்தின்' ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அடையாளம் காணப்பட்டு, திட்டத் தலைப்பு-15 இன் கீழ் தெற்கு ரயில்வேயால் செயல்படுத்தப்பட உள்ளது. தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான நான்காவது ரயில் பாதை தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, வண்டலூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
இதன் மூலம் சாலை போக்குவரத்தில் இருந்து, பெரும்பாலான பயணிகள் ரயில் போக்குவரத்திற்கு மாற அதிக வாய்ப்புள்ளது. புறநகர் ரயிலில் தினமும் பயணம் செய்வோர் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகத்திற்குச் செல்வோர் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
தென் மாவட்ட பயணிகள் மற்றும் சென்னை பயணிகளுக்கு உபயோகமான இந்தத் திட்டத்திற்கு, மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஒப்புதல் அஸ்வினி வைஷ்ணவ் அளித்திருப்பது, ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விரைவு ரயில்களின் மூலம் தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு நான்காவது ரயில் பாதை மிகவும் பயனுள்ளதாக அமையும். ரயில்களில் நெரிசல் தவிர்க்கப்பட்டு, தாமதமின்றி இயக்க இந்த திட்டம் உதவும். அதோடு விரைவில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்பட உள்ளதால், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான நான்காவது ரயில் பாதை முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் காஞ்சிபுரத்தில் புதிய விமான நிலையம் அமைய இருப்பதால், நான்காவது ரயில் பாதை இந்தத் தடத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பேருதவியாக அமையும். விரைவு மற்றும் புறநகர் ரயில்கள் தனித்தனியே இயங்க நான்காவது ரயில் பாதை உதவும் என்பதால், கூடுதல் வருமானமும் கிடைக்கும். மேலும் ஒரகடம், படப்பை மற்றும் காஞ்சிபுரத்தில் அதிக தொழிற்சாலைகள் இருப்பதால் இவ்வழியே சரக்கு போக்குவரத்தின் மூலமும் தெற்கு ரயில்வேக்கு அதிக இலாபம் கிடைக்கும்.