உலகிலேயே முதல் முறை..! 2007க்கு பிறகு பிறந்தவர்கள் புகைபிடிக்க தடை.. எந்த நாட்டில் தெரியுமா ?
உலகின் முதல் நாடாக, இளம் வயதினர் புகை பிடித்தலுக்கு தடை விதித்துள்ளது மாலத்தீவு.
புகையிலை நுகர்வு மற்றும் புகைபிடித்தல் நமது ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கிறது, கணையம், வயிறு, வாய், கல்லீரல், மலக்குடல், பெருங்குடல்,உணவுக்குழாய் போன்ற செரிமான அமைப்பில் புற்றுநோய், பக்கவாதம், போன்றவற்றை ஏற்படுத்துகிறது.மேலும், நரம்பியல் தொடர்பான நோய்களுடன் சேர்ந்து நரம்பு இரத்த நாள சிக்கல்கள்,நரம்பியல் கோளாறுகள்.இதய நோய்,நுரையீரல் நோய்கள், நீரிழிவு நோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், காசநோய், கண் நோய் போன்ற நோய்கள் நமக்கு ஏற்படுகின்றன.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பயிரிடுவதற்காக சுமார் 35 லட்சம் ஹெக்டேர் அளவிலான நிலம் அழிக்கப்படுகிறது. புகையிலை சாகுபடியால் ஆண்டுதோறும் 2,00,000 ஹெக்டேர் காடழிப்பு மற்றும் மண் சீரழிவு ஏற்படுகிறது.உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.5 லட்சம் கோடி சிகரெட் துண்டுகள் முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் 80 கோடி கிலோ நச்சுக் கழிவுகளை உருவாக்கி, ஆயிரக்கணக்கான ரசாயனங்களை காற்று, நீர் மற்றும் மண்ணில் வெளியிடுகிறது.இதனால் நமது சுற்றுச்சூழ்நிலை பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தரவுகளின்படி, புகைபிடித்தல் உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 7 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளுக்குக் காரணமாகிறது.
புகையிலைப் பயன்பாடு இந்தியா உடபட பல உலக நாடுகளிலும் சட்டப்பூர்வ எச்சரிக்கையுடன் எளிதாக விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில் மாலத்தீவு உலகின் முதல் நாடாக, இளம் வயதினர் புகை பிடித்தலுக்கு தடை விதித்து சட்டமாக்கியுள்ளது. .இச்சட்டத்தின் மூலம் மாலத்தீவு முழுவதும் எந்த ஒரு பகுதியிலும் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.இச்சட்டம் 01.01.2007க்குப் பிறகு பிறந்தோர் அனைவருக்கும் பொருந்தும்.
இச்சட்டத்தின் மூலம் புகையிலைப் பொருட்களை எந்த வடிவத்திலும் வாங்குவது, விற்பது,பயன்படுத்துவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டம் இந்த நாட்டில் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், புகையிலை இல்லாத புதிய தலைமுறையை உருவாக்கவும் உதவும் என நம்பப்படுகிறது.
இச்சட்டம் 18 வயதுக்குட்பட்டவா்கள் புகையிலை பொருள்களைப் பயன்படுத்துவதை தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.இந்த புதியச் சட்டத்தின் மூலம் விற்பனையாளா்கள் புகையிலையிலான பொருட்களை வாங்குபவர்களின் வயதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே விற்பனை செய்ய வேண்டும். இந்தத் தடை, மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும்,எலக்ட்ரிக் சிகரெட் மற்றும் வேப்பிங் பொருள்களின் இறக்குமதி, விற்பனை, விநியோகம், வைத்திருத்தல் மற்றும் பயன்பாட்டிற்கு விரிவான தடையையும் பராமரிக்கிறது.
மேலும்18 வயதுக்குட்பட்டவருக்கு புகையிலை விற்றால் 50,000 ருஃபியா (சுமாா் ரூ.2.8 லட்சம்) அபராதம், வேப்பிங் சாதனம் பயன்படுத்தினால் 5,000 ருஃபியா (ரூ.28,000) அபராதம் விதிக்கப்படும் வகையில் இந்த புதியச்சட்டம் அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

