

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகள் கடுமையான சவாலாகவே உள்ளன, 2025-ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 29,018 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது நாட்டின் மொத்த சாலை இறப்புகளில் 30%க்கும் அதிகமாகும். நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் குறைத்து உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
இந்தியாவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகள் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டணத்தை தனியார் சுங்க கட்டணம் அமைத்து வாகன ஓட்டிகளிடம் வசூலித்துக்கொள்கிறார்கள். சுங்க கட்டணம் வசூலித்துக்கொள்கிறார்களே தவிர, நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வாகன ஓட்டிகளிடம் இருந்து வருகிறது. மோசமான சாலைகளால் விபத்து ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3,500 இடங்கள் விபத்து ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுபோன்ற இடர்களை தவிர்க்க தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கும் விதிகளில் மாற்றம் கொண்டுவர சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை முடிவெடுத்துள்ளது.
அந்த வகையில், சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், திருத்தப்பட்ட கட்டுமானம்-செயல்படுத்துதல்-பரிமாற்றம் (BOT) கட்டமைப்பின் கீழ், கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு வருடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விபத்துகள் நடந்தால், ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்க நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக மூத்த அரசு அதிகாரி தெரிவித்தார்.
அந்த வகையில், தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட 500 மீட்டர் தொலைவில் 2-வது தடவையாக விபத்து நடந்தால் சம்பந்தப்பட்ட காண்டிராக்டருக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
விபத்து நடந்த மறு ஆண்டு மீண்டும் விபத்து பதிவானால் காண்டிராக்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் ஒப்பந்த பணிகளை எடுத்த ஒப்பந்ததாரர்கள் மாதத்துக்கு ஒரு முறை கட்டுமான பணிகளின் நிலை குறித்து டிரோன்கள் மூலம் எடுத்த படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மற்றொரு முக்கியமான மாற்றமாக, நெடுஞ்சாலைகளில் அதன் ஒப்பந்ததாரர்களின் விவரங்களை வெளியிடவும் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சாலைகளில் சிறப்பு பலகைகள் நிறுவப்பட்டு அதில் ஒப்பந்ததாரரின் பெயர், முகவரி, மொபைல் எண் போன்ற விவரங்களை பதியப்படும். இதன் மூலம் சாலையின் தரத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நடவடிக்கை எடுப்பதை எளிதாக்கும்.
BOT திட்டங்களில் 15 முதல் 20 ஆண்டு சலுகைக் காலங்களில் சாலை பாதுகாப்பிற்கு ஒப்பந்ததாரர்களை பொறுப்பேற்க வைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
அபராதங்களுடன், இந்தியா முழுவதும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம் கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை நாடு தழுவிய அளவில் அரசாங்கம் விரைவில் விரிவுபடுத்த உள்ளதாகவும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் செயலாளர் வி. உமாசங்கர் கூறினார்.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா முழுவதும் நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் முதல் ஏழு நாட்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை பணமில்லா சிகிச்சை கிடைக்கும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) இந்த ஆண்டு மே மாதம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருந்தது.
சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை தாமதமாகி வருவதால் ஏற்படும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டம் தேசிய சுகாதார ஆணையத்தின் ஐடி தளம் மூலம் செயல்படுகிறது.
ஒப்பந்ததாரர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் விரைவான மருத்துவ சேவையை வழங்குதல் என்ற அரசாங்கத்தின் இரட்டை அணுகுமுறையின் மூலம் 2030-ம் ஆண்டுக்குள் சாலை விபத்து மற்றும் இறப்புகளையும் குறைப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.