

கடந்த மார்ச் 4 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டியில் நடைபெற்றது. கட்சியின் சார்பில் இந்த கூட்டத்தில் பங்கேற்க 4000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கி இருந்தனர். விஜயின் வருகை அறிந்த அவரது கட்சியின் தொண்டர்கள் பலரும் விஜய் செல்லும் வழியில் அவரை பின்தொடர்ந்து வந்தனர். அவ்வாறு விஜயை பின் தொடர்ந்து செல்லும்போது விஜய் ரசிகர் இருவர் திருச்சி– தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் விக்னேஷ் என்ற கல்லூரி மாணவரும் அவரும் நண்பரும் சிக்கி படுகாயடைந்தனர். இதில் விக்னேஷிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் , அவருடன் பயணித்த நண்பருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.இதனால், அந்தப்பகுதியில் தற்காலிமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படுகாயமடைந்த விக்னேஷையும் அவரது நண்பரையும் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலையில் பலத்த காயமடைந்த அவரை தஞ்சாவூரில் உள்ள காமாட்சி தனியார் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். பின்னர் விக்னேஷ் பற்றி , அவரது தந்தையிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி கேட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்தார். அந்த காணொளியில் விக்னேஷின் தந்தை தான் ஒரு பால் வியாபாரம் செய்யும் வியாபாரி என்று கூறியிருந்தார்.அவர் சமீபத்தில்தான் விக்னேஷின் தாயாருக்கு உடல் நலம் இல்லாமல் , மருத்துவமனையில் சேர்த்து 10 லட்சம் ரூபாய் வரையில் செலவு செய்து வந்ததாக கூறினார்.
இன்னும் அவரது மனைவி முழுவதுமாக குணமாகாத நிலையில் தற்போது அவரது மகனும் விபத்தில் சிக்கி , சிகிச்சையில் இருப்பதால் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக வருத்தத்துடன் கூறியிருந்தார். காலையில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு தான் விக்னேஷ் சென்றுள்ளார். விக்னேஷ் கல்லூரியில் இருந்து விஜயை பார்க்க சென்றது கல்லூரி நிர்வாகத்தின் தவறு என்று தெரிவித்திருந்தார்.
கல்லூரி நிர்வாகத்தினர் மாணவனை கண்காணிக்காமல் விட்டுள்ளனர் , அவர் கல்லூரியை விட்டு வெளியேறி இருந்தால் , உடனடியாக தனக்கு தகவல் தெரிவித்து இருக்கலாம் என்றும் வேதனையுடன் விக்னேஷ் தந்தை கூறியுள்ளார். ஏற்கனவே கடும் சிரமத்தில் இருக்கும் தனக்கு, தற்போது தனது மகன் சிகிச்சைக்கு இரண்டு லட்ச ரூபாய் வரை மருத்துவமனை நிர்வாகத்தினர் கட்டணமாக கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தில் இருந்து ஏதேனும் உதவி செய்வார்களா? என்று கேட்டதற்கு தான் யாரையும் எதிர்பார்க்கவில்லை. என் கடமை தன் மகனை காப்பாற்றுவது , எப்படியும் பணத்தை தயார் செய்து கட்டி விடுவேன் என்று கூறியிருந்தார் , இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் இருந்தது.
இந்நிலையில் இன்று (மார்ச் 9) தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விக்னேஷையையும் , அவரது பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இது போன்ற செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என்று அறிவுரையும் கூறிய அவர் , தனியார் மருத்துவமனையில் அவர் பெறும் சிகிச்சைக்கு உண்டான முழு தொகையையும் தமிழக அரசே ஏற்கும் என்று உறுதி தெரிவித்தார். இந்த சந்திப்பில் அமைச்சருடன் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலியும் உடனிருந்தார்.
அன்பில் மகேஷ் மாணவனை சந்திக்கும் அந்த காட்சிகள் சமூக வலைகளில் தற்போது பேசுபொருள் ஆகியுள்ளது. இதுவரையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் விக்னேஷை யாரும் சந்திக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.