

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற மாணிக்கம் தாகூர், ‘காங்கிரஸ் கட்சியைத் தொட்டால் திருப்பி அடிப்போம்’ என ஆவேசமாக எச்சரித்துள்ளார். எங்களை துரோகிகள் என்று கூறினாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் (திமுக, அதிமுக, பாமக, பாஜக) ‘அடிக்கு அடி’ என்ற ரீதியிலேயே பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை இருந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு பதிலாக புதிய தலைவராக மாணிக்கம் தாகூரை நியமித்து காங்கிரஸ் தலைமை அறிவித்தது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாற்றப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் புதிய தலைவர் மாணிக்கம் தாகூர் என்ற அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தவெகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு அளித்ததை தொடர்ந்து திமுகவில் இருந்து விலகியதுடன், தவெக அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தவெகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டியில் தேர்தலுக்கு முன்பாகவே மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் இருந்தனர்.
மாணிக்கம் தாகூர், கடந்த 2009, 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது விருதுநகர் மக்களவை தொகுதி எம்பியான மாணிக்கம் தாகூர் மக்களவை கொறடாவாகவும் இருந்து வருகிறார். மேலும் மாணிக்கம் தாகூர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் அணுக்கமாகச் செல்லக் கூடியவர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய பொறுப்பை ஏற்ற மாணிக்கம் தாகூருக்கு, கட்சியின் மூத்த நிர்வாகிகள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அதன் பின்னர் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி என்பது மதம், மொழி, மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் மகத்தான இயக்கம் என்றார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்துவது தனது முதன்மை இலக்காக இருக்கும் என்றும், மாவட்டம் தோறும் கட்சியை பலப்படுத்தும் வகையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைத்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் கட்சியின் வளர்ச்சி, கூட்டணிக் கட்சிகளுடனான உறவு மற்றும் அரசியல் விமர்சனங்கள் குறித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்தார்.
ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்குவதே எங்கள் அடுத்த இலக்கு என்றும், 2029 மக்களவைத் தேர்தலை நோக்கி காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், கூட்டணியின் ஒற்றுமை பாதிக்கப்படாத வகையில் காங்கிரஸ் செயல்படும் எனவும் அவர் விளக்கினார்.
பேச்சின் போது, ‘திமுகவினருக்கும் எனக்கும் எந்தவிதமான வாய்க்கால்-வரப்பு சண்டையும் இல்லை. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய சூழல் உள்ளது. தேவையற்ற மோதல்களை உருவாக்கும் எண்ணம் எங்களிடம் இல்லை’ என்று கூறினார்.
அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியையோ அதன் தலைவர்களையோ தொடர்ந்து விமர்சித்து, நக்கல் செய்து, அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் எச்சரித்தார். ‘எங்களை துரோகிகள் என்று சித்தரிக்க முயற்சித்தாலோ, காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் வகையில் யாரேனும் செயல்பட்டாலோ அதற்கு அமைதியாக இருக்க மாட்டோம். காங்கிரஸை அடித்தால் திருப்பியடிப்போம். அரசியல் ரீதியாகவும், கருத்து ரீதியாகவும் வலுவான பதிலடி கொடுப்போம்’ என்று ஆவேசமாக பேசினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது தமிழக காங்கிரஸ் தலைமைக்கு எதிராக பல்வேறு கருத்துக்களையும், திமுக கூட்டணியில் இருந்துகொண்டே திமுகவை கடுமையாக விமர்சித்து தீர்மானம் போட்டவர் மாணிக்கம் தாகூர். குறிப்பாக ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற கருத்தை தொடர்ச்சியாக முன்வைத்தவர்.
திமுக மற்றும் முக ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கக் கூடாது என்பதையும் மறைமுகமாக வலியுறுத்தி வந்தார். அவரது கருத்துகளால் எக்ஸ் தளத்தில் திமுக - காங்கிரஸ் கட்சியினரிடையே பெரிய அளவில் வார்த்தைப் போர் நடந்தது நினைவுகூரத்தக்கது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், காங்கிரஸ் தரப்பிலிருந்து திமுகவுக்கு எதிராக தொடர்ந்து ஒலித்த முக்கிய குரல்களில் ஒருவராகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் திமுகவில் இருந்த விலகி தவெகவிற்கு ஆதரவு கொடுத்ததில் இருந்து திமுகவினர் காங்கிரஸை மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தான் மாணிக்கம் தாகூர் ‘காங்கிரஸை அடித்தால் திருப்பியடிப்போம்’ என்று கூறியிருப்பது திமுகவை மறைமுகமாக எச்சரித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.