மஞ்சப்பை வலைதளம்: மாசுக் கட்டுப்பாடு வாரியம் விளக்கம்!

மஞ்சப்பை வலைதளம்: மாசுக் கட்டுப்பாடு வாரியம் விளக்கம்!
Published on

மிழ்நாடு அரசின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தொடங்கப்பட்டிருக்கும், ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் குறித்தும், மஞ்சப்பை செயலியில் உள்ள வசதிகள் குறித்தும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், "தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துடன் இணைந்து, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதித்த தடையினை கடந்த 2019ல் இருந்து செயல்படுத்தி வருகின்றது.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அதிகாரிகளைக் கொண்டு மாவட்ட வாரியாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான தொடர் சோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக 06.06.2023 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அரங்கத்தில் நடைபெற்ற உலக சுகாதார தின விழாவில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்த, ‘மீண்டும் மஞ்சப்பை இணையதளம்’ மற்றும் ‘மீண்டும் மஞ்சப்பை செயலி’ அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மஞ்சப்பை இணையதளம், பொது மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் விவரங்கள், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு பிரச்சார விவரங்களை அறிந்துகொள்ள உதவுகிறது.

தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் மேற்கொண்ட மாவட்ட வாரியான அமலாக்க விவரங்கள், பல்வேறு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் மாவட்ட வாரியாக வகைப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்களின் விவரங்கள் இந்த இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மஞ்சப்பை விற்பனை இயந்திரம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் நசுக்கும் இயந்திரங்கள் அமைந்துள்ள இடங்கள் மாவட்ட வாரியாக இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இணைய தளம் சமீபத்திய சர்வதேச, தேசிய மற்றும் மாநில செய்திகள் மற்றும் வெளியீடுகளை வழங்கும். இதேபோல், மஞ்சப்பை செயலி, தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மஞ்சப்பை செயலி மூலம், கூகுள் வரைபடத்தின் மூலம் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில் நசுக்கும் இயந்திரம் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள முடியும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை உற்பத்தி செய்பவர்களின் விவரங்களை அறிந்துகொள்ள மற்றும் பதிவுவும் செய்யலாம். தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர்க்கு எதிராக புகார்களை பதிவு செய்யலாம். மேலும் தெரிந்துகொள்ள www.tnpcbmeendummanjappai.com மற்றும் ‘மீண்டும் மஞ்சப்பை’ செயலியினை Play Storeலிருந்து பதிவிறக்கவும் செய்து பயன்படுத்தவும்’ என்று அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com