

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூகர்பெர்க் சமீபத்தில் போட்ட தனது பேஸ்புக் பதிவில், அமெரிக்காவை பாதுகாத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 'மர்ஃப்' சவாலை ஏற்றுக்கொண்டு முடித்துள்ளதாக கூறியிருக்கிறார்.
அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த லெஃப்டினன்ட் மர்ஃப்-ன் பெயரிடப்பட்ட இந்த சவாலானது, ஒரு கடினமான பயிற்சியை முடித்துக் காட்டுவதை உள்ளடக்கியதாகும். சமீப காலமாகவே தன் உடல் நலம் சார்ந்த அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் பல இடுகைகளை அவர் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இந்த சவால் குறித்து இவர் வெளியிட்டுள்ள பதிவும் ஒத்துப்போகிறது எனலாம்.
இந்த மர்ஃப் சவாலில் முதலில் ஒரு மைல் தூரம் ஓட வேண்டும். அதைத் தொடர்ந்து 100 புல் அப்கள், 200 புஷ் அப்கள், 300 ஸ்குவார்ட்ஸ் எடுத்து விட்டு, இறுதியில் மீண்டும் ஒரு மைல் தூரம் ஓடி முடிக்க வேண்டும். இது அனைத்தையும் 40 நிமிடங்களுக்குள் செய்ய வேண்டும். இந்த சவால் செய்யும்போது, தோராயமாக 9 கிலோ எடையுள்ள ஒரு பையை அணிந்திருக்க வேண்டும். இந்த பயிற்சி மறைந்த லெஃப்டினென்ட் மர்ஃப்-ன் விருப்பத்திற் குரியதாகக் கருதப்படுகிறது.
இவர் கடற்படையில் சீல் அதிகாரியாக இருந்து, மெடல் ஆப் ஹானர் கௌரவத்தைப் பெற்றவர். ஆப்கானிஸ்தானில் தனது உயிரை இழந்த இவர், வியட்நாம் போருக்குப் பிறகு, இந்த விருதைப் பெற்ற முதல் அமெரிக்க கடற்படை உறுப்பினராவார். இந்த சவாலை மார்க் ஜூக்கர்பெர்க் 39 நிமிடங்கள் மற்றும் 58 வினாடிகளில் முடித்துக் காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த சவாலில் இவருடன் அவரது மகள்களும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் சிறுபிள்ளைகள் என்பதால், 1/4 மர்ஃப் என்கிற பெயரில், குறைந்த நேரத்தில், குறைவான உடற்பயிற்சி செய்து அந்த இலக்கை அடைவதற்கு முயற்சித்தனர். அவர்கள் வெறும் 15 நிமிடங்களில் தங்கள் 1/4 மர்ஃபை அடைந்து, உடல் தகுதிக்கான தங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர்.
கடந்த மே மாதத்தில் இந்த சவாலை வெற்றிகரமாக முடித்து, தன் உடற்பயிற்சி பயணத்தில் மற்றொரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளார் மார்க் ஜுக்கர்பெர்க். மேலும், இன்ஸ்டாகிராம் தளத்தில் இவருக்கு 11 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் Jiu-jitsu போட்டியிலும் தான் வென்றதாக அறிவித்திருந்தார். இந்த போட்டியில் கெரில்லா அணிக்காக தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றதை ஜுக்கர்பெர்க் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பத் துறையில் சிறந்த தொழில் முனைவோராக இருக்கும் இவருக்கு, இதையெல்லாம் செய்வதற்கு எப்படித்தான் நேரம் கிடைக்கிறதோ தெரியவில்லை?