தமிழக அரசின் திருமண நிதியுதவி திட்டம்: தங்கம் மற்றும் உதவித்தொகை பெறுவது எப்படி?

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பிள்ளைகளுக்கு திருமண நிதியுதவி திட்டங்களில் ஒரு பவுன் தங்கம் மற்றும் நிதியுதவியை இலவசமாகவே அரசு கொடுக்கிறது
Marriage Assistance Schemes
Marriage Assistance Schemes
Published on

இந்தியாவில் தங்கம் விலை கடந்த ஆண்டில் இருந்து ராக்கெட் வேகத்தில் சென்ற நிலையில் கடந்த சில நாட்களாக சற்று குறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14,320க்கும், ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.1,14,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுவதால் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் ஏழை எளிய சாமானிய மக்கள் திருமணத்திற்கு பெண் பிள்ளைகளுக்கு தங்கம் போடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஏழை குடும்பத்தில் பிறந்த பெண்களின் திருமணத்திற்கு உதவும் பொருட்டு தமிழக அரசு ஒரு பவுன் தங்கம் கொடுக்கிறது. அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பிள்ளைகளுக்கு திருமண நிதியுதவி திட்டங்களில் ஒரு பவுன் தங்கம் மற்றும் நிதியுதவியை இலவசமாகவே அரசு கொடுக்கிறது. அவை எந்த திட்டங்கள்? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் ஏழைப் பெற்றோரின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள், கலப்புத்திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் மற்றும் கைம்பெண்களின் மகள் ஆகியோருக்கு உதவும் வகையில் திருமண உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்:
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நிதியுதவி: ரூ.2 இலட்சம் வழங்கினார் முதல்வர்!
Marriage Assistance Schemes

8 கிராம் தங்கம் தரும் திருமண உதவித் திட்டம் :

இத்திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் பெற மணமகள் 10-ம் வகுப்பு தேர்ச்சியும், பழங்குடியினராக இருந்தால் மணமகள் 5-ம் வகுப்பு வரையும் படித்திருக்க வேண்டியது கட்டாயம். இந்த விதிமுறைகள் பூர்த்தி செய்தால் மட்டுமே ரூ.25,000 நிதியுதவியும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும். அதேசமயம், கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள், தொலைதூரக் கல்வி, அரசு அங்கீகாரம் பெற்ற திறந்த நிலைப் பல்கலைக்கழகம் படித்த பெண்களுக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் :

1. இத்திட்டத்தின் கீழ், விதவை பெண் கல்வி பயிலாதவராகவோ அல்லது 10, 12-ம் வகுப்பு படித்தவராகவோ இருக்கும் பட்சத்தில் இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதன்படி, விதவை பெண்களின் திருமணத்திற்கு 25,000 ரூபாயும், தாலிக்கு 1 சவரன் (8 கிராம்) தங்க நாணயமும் வழங்கப்படும்.

மொத்த தொகையில் ரூ.15,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும் மீதமுள்ள ரூ.10,000 தேசிய சேமிப்பு சான்றிதழாக (NSC) வழங்கப்படும். இந்த தேசிய சேமிப்புப் பத்திரத்தை 5 வருடங்களுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து இருவரும் இணைந்து மாற்றிக் கொள்ளலாம்.

2. விதவை பெண் பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு (Diploma) பயின்றவராக இருக்கும் பட்சத்தில் அந்த விதவை பெண்களின் திருமணத்திற்கு ரூ.50,000 உதவித்தொகையும், தாலிக்கு 1 சவரன் (8 கிராம்) தங்க நாணயமும் வழங்கப்படும். மொத்த தொகையில் ரூ.30,000 மின்னணு பரிமாற்ற சேவை மூலமாகவும் மீதமுள்ள ரூ.20,000 தேசிய சேமிப்பு பத்திரமாக (NSC) வழங்கப்படும். இந்த தேசிய சேமிப்புப் பத்திரத்தை 5 வருடங்களுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து இருவரும் இணைந்து மாற்றிக் கொள்ளலாம்.

ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம் :

இத்திட்டம் ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம் ஆகும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

1. இத்திட்டத்தின் கீழ், விதவை பெண்ணுடைய மகள் கல்வி பயிலாதவராகவோ அல்லது 10, 12-ம் வகுப்பு படித்தவராகவோ இருக்கும் பட்சத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.25,000 மற்றும் தாலிக்கு 1 சவரன் (8 கிராம்) தங்க நாணயமும் வழங்கப்படும்.

2. அதேசமயம், விதவை பெண்ணுடைய மகள் பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு (Diploma) பயின்றவராக இருக்கும் பட்சத்தில் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு 50,000 ரூபாய் உதவித்தொகையும், தாலிக்கு 1 சவரன் (8 கிராம்) தங்க நாணயமும் வழங்கப்படும்.

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் :

இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற வருமான உச்சவரம்பு மற்றும் கல்வித் தகுதி எதுவும் அவசியமில்லை. எனவே, கல்வி பயிலாத பெண்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு ரூ.25,000 மற்றும் தாலிக்கு 1 சவரன் (8 கிராம்) தங்க நாணயமும் வழங்கப்படும்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் :

இந்த திட்டம், தமிழக அரசால் சாதி வேறுபாடுகளைக் களைந்து சமத்துவத்தை ஊக்குவிக்க செயல்படுத்தப்படும் திட்டமாகும்.

1. இத்திட்டத்தின் கீழ், கலப்புத் திருமணம் செய்துக் கொள்ளும் பெண் கல்வி பயிலாதவராக இருக்கும் பட்சத்தில், விண்ணப்பித்த பெண்ணிற்கு ரூ.25,000 ரூபாயும், தாலி செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) தங்க நாணயமும் வழங்கப்படும். மொத்த தொகையில் ரூ.15,000 நேரடியாக வங்கிக் கணக்குக்கும், ரூ10,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும் வழங்கப்படும். இந்த தொகையானது ஐந்து வருடங்களுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு வழங்கப்படும்.

2. இத்திட்டத்தின் கீழ், கலப்புத் திருமணம் செய்துக் கொள்ளும் பெண் பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு பயின்றவராக இருக்கும் பட்சத்தில், விண்ணப்பித்தவர்களுக்கு ரூ.50,000 ரூபாய் உதவித்தொகையும், தாலிக்கு 1 சவரன் (8 கிராம்) தங்க நாணயமும் வழங்கப்படும். மொத்த தொகையில் ரூ.30,000 நேரடியாக வங்கிக் கணக்குக்கும், மீதமுள்ள ரூ.20,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவியை பெற வேண்டுமென்றால், விண்ணப்பதாரர் ஒரு பெண்ணாகவும், தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். திருமணம் முடிந்த 2 ஆண்டுகளுக்குள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துவிட வேண்டும். 2 ஆண்டுகளை கடக்கும் பட்சத்தில் விண்ணப்பம் தகுதி நீக்கம் செய்யப்படும்.

புதுமணத் தம்பதியினரில் ஒருவர் SC/ST போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டியது அவசியம். இவற்றை எல்லாவற்றையும் மேலாக அவர்களுடைய திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் கண்டிப்பாக பதிவு செய்து இருக்க வேண்டும். மேலும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமான வரம்பு இல்லை.

இதையும் படியுங்கள்:
தங்கம் மட்டும் தான் ஏறணுமா? கடலை மிட்டாய்க்கும் வந்தது விலை ஏற்றம்..!
Marriage Assistance Schemes

- இத்திட்டங்கள் ஏழை எளிய தமிழ் குடும்பங்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்யவும், சமூகத்தில் பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் என்பதையும் பறைசாற்றுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com