
தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது பெயரில் கடந்த 2005 ஆம் ஆண்டு அறக்கட்டளை ஒன்றைத் திறந்தார். இந்த அறக்கட்டளை மூலம் ரூ.5 கோடியை வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்து, அதில் கிடைக்கும் வட்டித் தொகையை மாதந்தோறும் ஏழை மக்களுக்கு நிதியுதவியாக அளித்து வந்தார். அவ்வகையில் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் இன்று இம்மாதத்திற்கான நிதியுதவியை 8 பேருக்கு வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கடந்த 2005 நவம்பர் மாதத்தில் தொடங்கிய இத்திட்டத்தின் மூலம் 2007 ஜனவரி மாதம் வரை மாதந்தோறும் ரூ.10,000 நிதியுதவி அளிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு பிக்சட் டெபாசிட்டில் இருந்து ரூ.1 கோடியை மட்டும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு நன்கொடையாக வழங்கினார் கருணாநிதி. மீதமுள்ள ரூ.4 கோடியில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகையானது 2007 பிப்ரவரி மாதத்தில் இருந்து ஏழை மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் இந்த உதவித் தொகை ரூ.20,000 ஆகவும், 2013 இல் ரூ.25,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. கலைஞர் கருணாநிதி அறக்கட்டளையின் கீழ் ஜூலை மாதத்திற்கான நிதியுதவியை இன்று (08-07-2025) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்படி 8 பேருக்கு தலா ரூ.25,000 வீதம் மொத்தம் ரூ.2 இலட்சத்தை நலிந்தோர் மற்றும் மருத்துவ நிதியுதவியாக வழங்கினார். வெளி மாவட்டங்களில் இருந்து நிதியுதவி பெறுவோர் சென்னைக்கு வந்து போவதற்கான செலவை குறைக்கும் வகையில், காசோலையாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் இதுவரை கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மொத்தமாக ரூ.6 கோடியே 27 இலட்சத்து 90,000 நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பாக அளிக்கப்படும் நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டு, வருகின்ற நவம்பர் மாதத்துடன் 20 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை ஆண்டுகளில் எண்ணற்ற ஏழை, எளிய மக்கள் பயனடைந்து இருக்கிறார்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.