
தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பள்ளி மாணவிகளின் மீதான பாலியல் அத்துமீறல்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைகளை பள்ளியிலேயே சொல்லிக் கொடுக்கும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தற்போது கிட்டத்தட்ட ரூ.15.5 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6வது முதல் +2 வரை படிக்கக் கூடிய மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தற்காப்புக் கலைகள் சொல்லிக் கொடுக்கப்பட இருக்கின்றன.
ஒருசில பள்ளிகளில் ஏற்கனவே தற்காப்புக் கலைகளை மாணவிகளுக்கு சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் சிலம்பம், ஜூடோ, கராத்தே மற்றும் தேக்வோண்டோ போன்ற தற்காப்புக் கலைப் பயிற்சிகளை விரைந்து வழங்கிட அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்காப்புக் கலைப் பயிற்சிகள் ஒவ்வொரு மாணவிக்கும் தன்னம்பிக்கையை அளிக்கும். அதோடு தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் பாதுகாப்பு கவசமாகவும் இவை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம் ரூ.15 கோடியே 48 இலட்சத்து 96 ஆயிரம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தப் பயிற்சியின் கால அளவு 3 மாதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 6,045 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6வது முதல் 8வது படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்புக் கலைகளைப் பயிற்சியளிக்க ரூ.7 கோடியே 25 இலட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 5,804 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 6வது முதல் +2 வரை படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சியளிக்க ரூ.8 கோடியே 23 இலட்சத்து 56 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்காப்புக் கலைகளைப் பயிற்றுவிக்கும் பயிற்சியாளருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.4,000 என 3 மாதப் பயிற்சிக்கு ரூ.12,000 வழங்கப்படும். ஒரு வாரத்திற்கு 2 நாட்கள் தற்காப்புக் கலைப் பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும். மொத்தமுள்ள 3 மாதத்தில் 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
பயிற்சியாளரின் பெயர் மற்றும் விவரங்கள், பயிற்சியின் விவரங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி விவரங்கள் உள்ளிட்டவற்றை அந்தந்தப் பள்ளிகள் முறையாகப் பராமரிக்க வேண்டும்.
பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் பயிற்சி வகுப்புகள் கட்டாயமாகும். தமிழக அரசின் இந்தத் திட்டத்தின் மூலமாக மாணவிகள் தன்னம்பிக்கை நிறைந்த சக்தியாக வலம் வருவார்கள் என பள்ளிக்கல்வித் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.