
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மேலும் சில மாணவர்கள் கல்லூரியிலேயே போதை மருந்துகளைப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதனைத் தடுக்கும் விதமாக சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அம்மாநில உயர்கல்வித் துறை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் உள்பட அனைத்து கல்லூரிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என கர்நாடக அரசின் உயர்கல்வித் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இன்றைய இளம் தலைமுறை மாணவர்கள் சிலர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியா முழுக்க இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் மாணவர்கள் சிலர் கல்லூரிகளில் போதை மருந்துகளை எடுத்துக் கொள்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. அதோடு ராகிங் கொடுமைகளும் ஆங்காங்கே நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட்ட வேண்டும் என கர்நாடக உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், கேமராக்களின் செயல்பாடு குறித்த ஆய்வை நடத்தி, அதன் முடிவுகளை வருகின்ற ஜூலை 21 ஆம் தேதிக்குள் அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர்கள் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவ மாணவிகளைத் தீவிரமாக கண்காணிக்கவும், மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் உள்பட குற்ற நடவடிக்கைகளைத் தடுப்பதையும் உயர்கல்வித் துறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உயர்கல்வித் துறையின் உத்தரவு படி தனியார் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த அந்தந்த கல்லூரி முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே கல்லூரிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தால், அதுகுறித்த செயல்பாட்டை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதவிர சேமிப்புக் கணக்குகளில் இருக்கும் பயன்படுத்தப்படாத மாணவர் நிதி குறித்த விவரங்களையும் அளிக்க வேண்டும். மாணவர்களின் எதிராகால நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு, அனைத்துக் கல்லூரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.