மாதம் ரூ.1,999க்கு நீங்களும் கார் வாங்கலாம்! அதிரடி சலுகையை அறிவித்த பிரபல கார் நிறுவனம்..!
மத்திய அரசு தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் (GST Council), செப்டம்பர் 3-ம்தேதி நடைபெற்ற 56வது கூட்டத்திற்குப் பிறகு, இந்தியாவில் புதிய ஜிஎஸ்டி 2.0 நடைமுறைக்கு வந்து, வரி விகிதத்தை இரண்டு அடுக்குகளாக (5% மற்றும் 18%) மாற்றுவதாக அறிவித்தது. இதன்மூலம், பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள் 5% மற்றும் 18% வரி அடுக்குகளுக்குள் கொண்டு வரப்பட்டு கடந்த 22-ம்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த வரி குறைப்பு மற்றும் விலை குறைப்பு மூலம் மக்களின் கைகளில் அதிக பணம் இருக்கும், இதனால் அவர்களின் செலவழிக்கும் சக்தி அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
திருத்தப்பட்ட ஜிஎஸ்டி மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் முதல் கார்கள் வரை அதிரடியாக விலை குறைந்தது. பிரபலமான மகிந்திரா, டொயோட்டா வகை SUV கார்கள் முதல் இந்தியாவில் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் ஹாட்ச்பேக் மாடல்கள் வரை விலை குறைந்துள்ளன.
அதாவது, பட்ஜெட் மாடல் கார்கள் 40,000 முதல் 75,000 ரூபாய் விலை குறைந்துள்ளது. நடுத்தர வகை செடான் கார்கள் 57,000 முதல் 80,000 வரை விலை சரிந்திருக்கிறது. காம்பேக்ட் எஸ்.யூ.வி கார்கள் 68,000 முதல் 85,000 ரூபாய் விலை குறைந்துள்ளது.
முன்பு வசதிபடைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த கார்களை பயன்படுத்தி வந்த நிலையில், ஜிஎஸ்டி வரி திருத்தத்திற்கு பின், கார்களின் விலை அதிரடியாக குறைந்துள்ளதால், கார் வாங்குபவர்களின் எண்ணிக்கையும் ஒரு வாரத்திலேயே அதிகரித்துள்ளது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான 'மாருதி சுசுகி' வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க கவர்ச்சிகரமான, இ.எம்.ஐ., எனப்படும் மாத தவணை திட்டத்தை, அறிவித்துள்ளது. அதன்படி மாதந்தோறும், ரூ.1,999 தவணை முறையில் செலுத்தி இனி சாமானியர்களும் காரை சொந்தமாக்கிக் கொள்ள முடியும்.
திருத்தப்பட்ட ஜிஎஸ்டி, அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் மட்டும், (ஒரே நாளில்) மாருதி சுசுகி நிறுவனம், 25,000 கார்களை டெலிவரி செய்து, தன், 35 ஆண்டு கால சாதனையை முறியடித்ததுடன், நவராத்திரி பண்டிகை தொடங்கிய முதல் நான்கு நாட்களில் மட்டும், சுமார் 80,000 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிறுவனத்தில் முன்பு, ஒரு நாளைக்கு 10,000 ஆக இருந்த முன்பதிவு, தற்போது, 18,000 ஆக அதிகரித்துள்ளது. இதை மேலும் அதிகரிக்க மாருதி சுசுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து SEO பார்த்தே பானர்ஜி, ‘திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி.க்கு பின், சிறிய கார்களுக்கு கூட நல்ல வரவேற்பு உள்ளது. சிறிய கார்களில், 100 சதவீத விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 1,000க்கு 34 பேர் மட்டுமே கார் வைத்துள்ளனர். சாமானியர்களும் கார் வாங்குவதை எளிதாக்க, ஒரு பயனுள்ள மாத தவணை திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம். எனவே, அனைவரும் கார் வாங்கும் வகையில் மாதம் ரூ.1,999க்கு EMI செலுத்தும் வகையில் கடன் திட்டம் கொண்டு வர உள்ளோம்’ என தெரிவித்தார்.
உலகளவில் அதிக சந்தை மதிப்பு கொண்ட வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலில், இந்தியாவின் மாருதி சுசுகி எட்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.