எம்ஜிஆரின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து மறைந்தவர் மயில்சாமி - நடிகர் கார்த்தி புகழாரம்!

எம்ஜிஆரின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து மறைந்தவர் மயில்சாமி - நடிகர் கார்த்தி புகழாரம்!

கடந்த 40 வருடங்களாக தமிழ் திரையுலகில் நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் தங்களது பங்களிப்பை அளித்து வந்த மனோபாலா, டி.பி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (14.05.23) மாலை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தி.நகர் சர்.பிடி.தியாகராய மஹாலில் நடைபெற்றது.

சமீபத்தில் மறைந்த நடிகர்கள் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோரின் மறைவு தமிழ் திரையுலகிவிற்கு பேரிழப்பாக அமைந்துவிட்டது. இந்த நிகழ்வில் மனோபாலா, டிபி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு இந்த நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் அவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில், மறைந்த இந்த கலைஞர்களுக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, நடிகர் சங்க துணைத்தலைவர்பூச்சி முருகன், தமிழ் தயாரிப்பாளார்கள் சங்க செயலாளர் ராதா கிருஷ்ணன், தயாரிப்பாளர் டி.சிவா, பெப்சி துணை தலைவர் சுவாமிநாதன், திரப்பட கல்லூரிதலைவர் நடிகர் ராஜேஷ், நடிகை சச்சு, ரோஹிணி,தேவயானி, நடிகர் சரவணன், பசுபதி, அஜய் ரத்னம், மன்சூர் அலிகான், பொன்வண்ணன், அனுமோகன், வையாபுரி, டெல்லி கணேஷ், உதயா, விக்னேஷ், எம்.ஏ.பிரகாஷ், தளபதி தினேஷ், ஶ்ரீமன், வாசுடேவன், ஹேமசந்திரன், சவுந்தர்ராஜா, இயக்குனர் ஆர்.வி உதயகுமார், லியாகத்அலிகான் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலர் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மறைந்த இந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி இவர்கள் குறித்து மேடையில் பகிர்ந்து கொண்டார். ‘இந்த மூன்று பேருமே மக்களை மகிழ்வித்துள்ளனர். டி.பி.கஜேந்திரன் எப்போதுமே பாசிட்டிவ் எண்ணம் கொண்டவர். ஆளுமை மிக்கவர். மயில்சாமியுடன் சிறுத்தை படத்தில் இணைந்து நடித்தேன். தனக்கு மிஞ்சி தான் தானம் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு மனிதன் கடன் வாங்கி தானம் செய்கிறான் என்றால் அது மயில்சாமி ஒருவராக தான் இருக்கும். என்னிடத்தில் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் தனக்காக எதுவும் கேட்கவே மாட்டார். யாராவது ஒருவருக்கு உதவி செய்வதற்காக தான் அவரது அழைப்பு வரும். எம்ஜிஆரின் கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து மறைந்துள்ளார். இப்படி அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

மனோபாலாவை பொருத்தவரை பல நிகழ்வுகளின் அவரே பொறுப்பை எடுத்துக் கொள்வார். ஏதாவது வாக்குவாதம் போன்றவை நிகழ்ந்ததாக தெரிய வந்தால் அன்று இரவே அழைத்து அதை சமரசமாக முடித்து வைப்பார். எல்லோருடனும் தொடர்ந்து நட்பில் இருப்பார். மூன்று பேரையும் மிஸ் பண்ணுகிறோம். அவர்களது குடும்பத்துடன் நிச்சயம் நாங்கள் இருப்போம்” என்று கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வந்தவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடிகர் சங்க மேலாளர் தாமராஜ், பி.ஆர்.ஓ. ஜான்சன் அனைவரையும் வரவேற்றார்கள். நடிகை ரோகிணி இந்த நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com