

குடியரசு தின அணிவகுப்பில் சிஆர்பிஎப் ஆண்கள் படையை 26 வயதான சிம்ரன் பாலா என்ற இளம் பெண் அதிகாரி தலைமையேற்று வழிநடத்த உள்ளார். ஆண்கள் படைப்பிரிவுக்கு பெண் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும். இது வரலாற்று சிறப்புமிக்கதாகும்.
77-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் வரும் 26-ம்தேதி(திங்கள் கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தின் சிறப்பே அதன் கம்பீரமான அணிவகுப்புதான். டெல்லி கடமைப்பாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆயுதப்படைகளின் அணிவகுப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த அணிவகுப்பில் நாட்டின் வலிமை,கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்பு நடைபெற உள்ளது.
இந்த அணிவகுப்பில் இந்த ஆண்டு ஒரு பெண் அதிகாரி அனைவரது கவனத்தையும் ஈர்க்கப்போகிறார். அவரது பெயர் சிம்ரன் பாலா.26 வயதே ஆன இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உதவி கமாண்டன்டராக இருக்கிறார். இவர் ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் நவ்ஷேரா கிராமத்தைச் சேர்ந்தவர்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் சி.ஆர்.பி.எப். ஆண்கள் படை பங்கேற்கிறது.140 வீரர்களுக்கு மேல் பங்கேற்கும் இந்த படைப்பிரிவில் படையின் தளபதியாக சிம்ரன் பாலா, தலைமையேற்று கம்பீரமாக வீரநடை போட இருக்கிறார். ஆண், பெண் என்ற பாலின வேறுபாடு இன்றி ஒருவரின் தகுதி மற்றும் தலைமைப் பண்பு ஆகியவை வாய்ப்புகளைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை இது நிரூபிக்கிறது.
முதல்முறையாக ஆண்கள் படையை தலைமை தாங்கி இவர் அழைத்துச் செல்லும் காட்சியைக் காண நாடே காத்திருக்கிறது. இந்த சாதனை, இந்தியாவின் பாதுகாப்புப் படைகளில் மாறிவரும் நெறிமுறைகளை எடுத்துக்காட்டுகிறது. இது பெண்களுக்கான அங்கீகாரம் என்று அதிகாரிகள் பெருமைப்பட்டு உள்ளனர். அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அர்பணிப்பு மற்றும் துடிப்பான பணிக்கு பெயர் பெற்ற அதிகாரி சிம்ரன் பாலா, யு.பி.எஸ்.சி. (CAPF) தேர்வு எழுதி கடந்த 2023-ம் ஆண்டு இந்த பணிக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில் இவர் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று, அகில இந்திய அளவில் 82-வது இடத்தைப் பிடித்துடன், ரஜோரி மாவட்டத்தில் இருந்து சிஆர்பிஎப் அமைப்பில் அதிகாரியாக சேர்ந்த முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குருகிராமில் உள்ள சிஆர்பிஎஃப் அகாடமியில் பயிற்சி பெற்றபோது, பயிற்சியில் சிறந்த அதிகாரி விருதைப் பெற்றுள்ளார்.