
ஞாபகம் வருதே!...ஞாபகம் வருதே!...
அந்தக் கால அரசியல்வாதிகளின்
அத்தனை நல்ல குணங்களும் நமக்கு..
ஞாபகம் வருதே!...ஞாபகம் வருதே!...
சிறையில் கிடந்த லால்பகதூரின் குடும்பம்
சிரமப் படாமல் பசியாறி உலவ...
கட்சி அனுப்பிய காசில் மீதம்
கருத்துடன் நாளும் சேமித்து வைத்ததை...
அன்னார் மனைவி லிகிதம் எழுத
அறிந்த அவரோ அன்றைய தினமே
உதவித் தொகையைக் குறைத்திடச் சொல்லி
உறுதியாய் எழுதினாராம் கட்சித் தவலைவருக்கு!
தனியாய் நானும் இங்கே கிடக்கிறேன்!
தக்க உணவின்றி என்மகனும் அங்கே
சுற்றித் திரிவதாய் சொல்கிறார் பலரும்!
சுகமாய்ச் சிலநாள் அவனுடன் தங்க
வருவதாய்ச் சொன்ன வயதான தாயை
வேண்டாம்! வம்பை விலைக்கு வாங்க!
உன்னைப் பார்க்க உறவினர் வருவர்!
என் அதிகாரத்தைத் தவறாய் பயன்படுத்தி...
வேண்டாம் அது! நீ வீட்டிலேயே இரு!
என்று சொன்ன கர்ம வீரரை
இனியெப்போது இவ் வுலகம் காணும்?!
குடியரசுத் தலைவர் குடிகொண்ட வீட்டை
குடும்பத்தார் ஆசையுடன் பார்த்திட வேண்டி
தெற்கிலிருந்து ஏகினர் டெல்லி நோக்கி!
வீட்டை விட்டுப் புறப்பட்டது முதல்
திரும்பி இல்லம் சேர்ந்தது வரை…
அத்தனை செலவையும் சொந்தக் கணக்கில்
அழகாய்த் தானும் பைசல் செய்த
கலாம் சாரைக் காலம் மறக்குமோ!?
அமைச்சர் பதவியைத் துறந்த மறுநாளே
தலைமைச் செயலகம் செல்ல வேண்டி…
அருகிலுள்ள பேரூந்து நிறுத்தத்தில்…
அனைத்துப் பயணிருடன் தானும் ஒருவராய்
பேரூந்து ஏறிய பெரியவர் கக்கனை
நாடும் மறக்காது! நம்மாலும் மறக்கயியலாது!
கள் உண்ணாமையைக் காந்தி அறிவித்ததும்
தென்னங்கள்ளே அதிகம் என்பதை அறிந்த அவரும்
ஐந்நூறு மரங்கள் கொண்ட தென்னந்தோப்பை
உடனடியாக வெட்டிச் சாய்க்க முடிவையெடுத்து
நிறைவேற்றிக் காட்டிய நிகரற்ற தலைவர்
பெரியார் ஈவெரா என்பதை உலகே அறியும்!
ஞாபகம் வருதே!...ஞாபகம் வருதே!...
அந்தக் கால அரசியல்வாதிகளின்
அத்தனை நல்ல குணங்களும் நமக்கு..
ஞாபகம் வருதே!...ஞாபகம் வருதே!...