

சினிமாவோ, சீரியல்களோ எதுவாக இருந்தாலும், அவை நமது பண்பாட்டையும் நாகரிகத்தையும் உயரத்திற்கு எடுத்து செல்பவையாக இருக்க வேண்டும். உத்தம கதாபாத்திரங்கள் மூலம் உயர்வான கருத்துகளை அவற்றை பார்க்கும் ரசிகர்களின் மனதில் விதைப்பவையாக அமைய வேண்டும். பொறுமை, நிதானம், தியாகம் ஆகியவற்றின் மூலம் உலகத்தாருக்கு வழிகாட்டுபவையாகவும், தீயவற்றை அழித்து நல்லவற்றை பரப்புபவையாகவும் இருக்க வேண்டும். மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் பல நல்ல விஷயங்களைப் பதிக்கும் விதமாக அவற்றில் வரும் பாத்திர படைப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
பிரபலமான அத்தனை டிவி சேனல்களும் இன்றைய நிலையில் போட்டி போட்டுக்கொண்டு பல சீரியல்களை ஒளிபரப்புகின்றன. கதைக் கருக்களும், கள நிகழ்வுகளும் நாட்டு நடப்புடன் ஒத்துப் போபவையாக இருக்க வேண்டும். எங்கோ அரிதாக நடக்கும் சில அபூர்வ நல்லவற்றை உதாரணமாகக் காட்டி, உலகத்தவரை நல்வழிப்படுத்த முயல வேண்டும். ஆனால் நடப்பதோ, அதற்கு முற்றிலும் எதிர்மறையானது!
நாட்டின் ஏதோ ஒரு மூலையில்,சில வக்கிரபுத்தி படைத்தவர்களால் அரங்கேற்றபடும் அலங்கோலங்களை கதை கருவாக்கி,அதற்கு கண்,காது,மூக்கு வைத்து
அதனை எல்லோரும் பார்க்கும்படியாக செய்வதில் என்ன இன்பம் நமது மெகா சீரியல் இயக்குனர்களுக்கு என்பதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
இப்பொழுதெல்லாம் டிவி நிகழ்ச்சிகள், குறிப்பாக மெகா சீரியல்கள், வீட்டின் ஒவ்வொரு அறைக்கு மட்டுமல்ல; மொபைல்கள் மூலம் ஒவ்வொருவர் பாக்கெட்டுகளுக்குள்ளும் சென்று ஒளிந்து கொள்கின்றன.
பாலப் பருவத்தினரும்,பருவ வயதினரும் நடக்கின்ற அனைத்தையும் கவனித்து பார்க்கிறார்கள்.கத்தி மேல் நடப்பது போன்ற பருவத்தில்,மெகா சீரியல்கள் காட்டும்
பல காட்சிகள் அவர்களுக்கு நன்மை பயப்பதாக இல்லை.ஆரம்ப காலங்களில், டிவி விளம்பரங்களில் பெண்களின் உள்ளாடை விளம்பரங்கள் கூட இடம் பெறாமல்தான் இருந்தன.தற்பொழுதோ,டிவியைத் திறந்தாலே,முதலில் வருவது அவ்வகையான விளம்பரங்கள்தான்.அவ்வளவு ஏன்? எல்லா விளம்பரங்களுமே அரைகுறை ஆடைப் பெண்களுடன் தான்!
இன்றைக்கும் கிராமங்களில் புதிதாகத் திருமணம் செய்து கொள்வோருக்கான முதலிரவை,முதலிரவு என்று சொல்லாமல் ‘சோறு போடுவது’ என்ற மறைமுக சொல்லை கொண்டே குறிக்கிறார்கள்.அதிலும் கல்யாணம் ஆன அன்றிரவே சோறு போடும் நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளாமல்,திருமணம் ஆனவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளக் கால அவகாசம் கொடுத்து,நான்கைந்து நாட்களுக்கு பிறகே அந்த நிகழ்ச்சியை வைத்து கொள்கிறார்கள்.ஆனால் மெகா சீரியல்கள் காட்டுவது எவற்றை?திருமணமானவர்களை இணைய விடாமல் மாமியார்கள் ஏதாவது சாக்குப் போக்கு சொல்வதாகவும்,சில வில்லி மாமியார்கள் ஏடாகூடமாக எதையாவது செய்து அந்த ஜோடியைப் பிரிக்க முயல்வதாகவும் காட்டுகிறார்கள்.முதலிரவைக் காரணமாகக் கொண்டே பல எபிசோடுகளை இழுத்து விடுகிறார்கள்.பல சுட்டிக் குழந்தைகள் முதலிரவு என்றால் என்னவென்று குடும்பத்தாரிடம் கேட்டு, அவர்களை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குகிறார்கள்.
இது ஒரு புறமென்றால்,மறு புறத்தில் கல்யாணம் ஆன கதாநாயகன் வீட்டில், நாயகனின் தாயின் ஆதரவுடன் முறைப் பெண்கள் தங்கிக்கொண்டு,திருமணமாகி வந்த கதாநாயகியைக் கொல்லத் திட்டம் தீட்டுவதும்,தோற்றுப் போவதும்,மீண்டும் முயல்வதாகவும் காட்டிக் காட்டியே எண்ணற்ற எபிசோடுகளை இழுத்துக் கொண்டு போகிறார்கள்;இது பார்ப்பவர்கள் மனதில் வெறுப்பையே திணிக்கிறது.
எமக்குத் தெரிந்தவரை, யாம் விசாரித்தவரை நாட்டின் எந்தப் பகுதியிலும், எந்த ஒரு நாகரிக வீட்டிலும் இந்த அராஜக செயல் நடைமுறையில் இருப்பதாகவே தெரியவில்லை. வீட்டிலேயே முறைப்பெண்கள் காத்திருந்தாலும், நாயகனின் திருமணத்திற்கு பிறகு அவர்களாகவே வீட்டைக் காலி செய்துவிட்டு, தங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்வதுதான் நடைமுறை யதார்த்தம்!
இந்த, நடைமுறைக்கு ஒவ்வாத செயலுக்கு உதாரணமாகத் திகழும் இரு முக்கிய சீரியல்கள் சிங்கப் பெண்ணே!மற்றும் ஆடுகளம்!இப்படி வழக்கத்திலேயே இல்லாத,ஏற்றுக்கொள்ளவே முடியாத பாத்திர படைப்புகளுக்கு பெயர் தான் கேரக்டர் அசாசினேஷன்!-அதாவது பாத்திரக் கொலை அல்லது நற்பெயரை குலைத்தல்.
இதன் மூலம் நமது இயக்குனர்கள் இந்த சமுதாயத்திற்கு,இளம் பெண்களுக்கு சொல்ல வருவதென்ன?எதற்கு இந்த வீணற்ற வேலை?சமுதாயத்தை நேர் வழிப்படுத்த சீரியல்களா?அல்லது சீர்குலைக்கச் சீரியல்களா?
சீரியல்கள் பொழுது போக்குடன் புனிதமான கருத்துக்களையும், இளைஞர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில், அவர்கள் மனத்தில் விதைக்க முன் வர வேண்டும்.அதை விடுத்து, இப்படி எதிர்மறையான பாத்திரப் படைப்புகள் மூலம் சமுதாயத்தைச் சீரழிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?