

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் பாமக கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவுகிறது. இதன் காரணமாக தந்தை ராமதாஸ் ஒரு தரப்பிலும் மகன் அன்புமணி மற்றொரு தரப்பிலும் இருக்கின்றனர்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் ஆணையத்திடம் புதிய கட்சி தொடங்குவதற்கான விண்ணப்பத்தை அளித்துள்ளார். கட்சிக்கு அய்யா பாமக என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு அன்புமணி தரப்பிலான பாமக, அதிமுக - பாஜக கூட்டணியில் இடம் பிடித்துள்ளது. பாமகவிற்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கட்சி மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கட்சியும், சின்னமும் எனக்கே சொந்தமானது என ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் பாமக கட்சியும், சின்னமும் தலைவர் அன்புமணிக்கே உரித்தானது என நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த ராமதாஸ், கட்சி மற்றும் சின்னத்தை முடக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் இது தந்தை, மகன் பிரச்சனை என்பதால், உரிமையியல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. அதோடு இதில் தேர்தல் ஆணையமும் முடிவெடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது வரை தொடர்ந்து நிலுவையில் இருக்கும் இந்த வழக்கு, பெரும்பாலும் அன்புமணிக்கே சாதகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் புதிதாக கட்சியை தொடங்கியுள்ள வி.கே. சசிகலாவுடன் கூட்டணி சேர்ந்து உள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். வி.கே.சசிகலா மற்றும் ராமதாஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது புதிதாக கட்சியை தொடங்க தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளார் ராமதாஸ்.
இதன்படி புதிய கட்சிக்கு ‘அய்யா பாமக’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘அய்யா பாசறை மக்கள் கட்சி’ என்பது இதன் முழு அர்த்தம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், ராமதாஸ் விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ராமதாஸ் சசிகலாவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அன்புமணி தரப்பு பாமகவிற்கு அது பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வருகின்ற மார்ச் 30ஆம் தேதி முதல் தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட இருக்கும் சூழலில், ஏற்கனவே தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் ராமதாஸ் தொடங்க இருக்கும் புதிய கட்சி குறித்த அறிவிப்பு, அன்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.