

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 18) தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரின் உரையுடன் தொடங்கியது.இதையடுத்து, இன்று கூடிய சட்டமன்றத் தொடர் கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணையை கட்டும் முயற்சியில் இறங்கி உள்ள கர்நாடக அரசின் செயலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை முன்மொழிந்த ஆளும் கட்சிக்கு ஆதரவாக எதிர்க்கட்சியான திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர்.
மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான சிறப்பு தீர்மானத்திற்கு, காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், "தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது. இது தமிழ்நாட்டு மக்களின் உரிமை பறிக்கும் செயல்" என சட்டப்பேரவையில் கருத்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் காங்கிரஸ் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ராஜேஷ்குமார் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தனது எதிர்ப்பை கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, காவிரி என்பது வெறும் நதி மட்டுமல்ல, அது தமிழ்நாடு விவசாயிகளின் உயிர்நாடி. காவிரி நீரை நம்பித்தான் லட்சக்கணக்கான விவசாயிகலும் ஒட்டுமொத்த விவசாயமும் இயங்கி வருகிறது. உச்ச நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை மதிக்காமல், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல், தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் செயலாகும் என கூறினார்.
மேகதாது அணை் பிரச்சினை கடந்து வந்த பார்வை :
இந்த மேகதாது அணைப் பிரச்சினை ஆட்சிகள் மாறினாலும் தீர்வு காணப்படாமல் இழுபறியாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தில், காவிரியும் அர்க்காவதியும் இணையும் இடத்திற்கு அருகில் பிரச்சினைக்குரிய இடமான மேகதாது அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் எல்லையான பிலிகுண்டுலுவுக்கு சற்று மேல் பகுதியில் உள்ளது. கர்நாடக அரசு தங்கள் மாநிலத்தின் நீர்த் தேவையை வளமாக்கும் நோக்கில் இங்கு பெரிய நீர்மின் திட்டம் மற்றும் குடிநீர் திட்டத்திற்காக அணையை முன்மொழிந்து வருகிறது. ஆனால் மேகதாதுவில் அணையைக் கட்டினால் தமிழகத்தின் நீர் உரிமை பாதிக்கப்படும் என்பதால் தமிழக அரசு கட்சி சார்பின்றி திட்டவட்டமாக எதிர்த்து வருகிறது.
ஏற்கனவே இந்த பிரச்சனை தொடர்பாக இரு மாநிலங்களும் நீதிமன்றங்களை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் விசாரணைக்கு பின்னர் வந்த காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புகளின்படி, காவரி படுகை மாநிலங்களின் முன் அனுமதியின்றி புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு குறையும், மேலும் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து பாதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
பெங்களூரு போன்ற நகரங்களின் குடிநீர் தேவைக்காகவும், மின்சாரம் தயாரிக்கவும் இந்த அணை அவசியம் என்றும் உபரி நீரை மட்டுமே சேமிக்கப் போவதாக கர்நாடகா தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் இருந்து வரும் இந்த பிரச்சனையைப் பெரிதாக்கும் விதமாக காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது அரசுப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரியின் குறுக்கே புதிய அணைகள் அல்லது நீர் தேக்கங்கள் கட்டுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.மத்திய அரசு இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடமும், தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலத்தில் தற்போது டி கே சிவகுமார் தலைமையில் காங்கிரஸ் அரசு தற்போது செயல்பட்டு வருகிறது என்பதால் தமிழ்நாடு காங்கிரஸ் அமைச்சர் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தது கவனிக்க வைக்கும் கருத்தாக மாறியுள்ளது.