திமுகவின் தோல்விக்கு காரணம் என்ன? கள ஆய்வு குழு அறிக்கையில் வெளிவந்த உண்மை..!!

மாதிரி படம்
மாதிரி படம்
Updated on

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்க முடியாமல் ஆட்சியை இழந்தது. இந்த தோல்வி திமுகவினரை பொருத்தரவை ஒரு அதிர்ச்சிகரமான எதிர்பார்க்காத ஒரு தோல்வியாகவே பார்க்கப்படுகின்றது. ஏனெனில் பெரும்பாலானோர் தொடர்ந்து இரண்டாவது முறையாக திமுக தான் ஆட்சியில் அமரும் என கணிக்கப்பட்டது. அதேபோல் கருத்து கணிப்புகளும் அதையே சொன்னது. ஆனால் அந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி தவெக வெற்றிபெற்றது பலருக்கும் ஆச்சர்யமாகவும் ஒரு சிலருக்கு அதிர்ச்சியாகவும் தான் இருக்கின்றது என சொல்லலாம்.

இந்நிலையில் திமுகவின் இந்த தோல்விக்கு முக்கியமான காரணங்கள் என்ன ? எந்த விஷயத்தில் நாம் சறுக்கினோம் என ஆய்வு செய்ய திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த மே மாதம் 14-ந்தேதி 36 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்தார். ஜூன் 10-ம்தேதிக்குள் (இன்று) அந்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்த கள ஆய்வு குழுவில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், தலைமை நிலைய செயலாளர்கள், இளைஞர் அணி மாநில நிர்வாகிகள், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் தொண்டர்களை தனித்தனியாக சந்தித்து கருத்துக்கள் கேட்டு அதில் திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்து அலசி ஆராயப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாம்.

இதையும் படியுங்கள்:
முறிகிறதா திமுக-மதிமுக கூட்டணி..? திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதரிஷ்டவசமானது - துரை வைகோ..!
மாதிரி படம்

அவர்கள் தமிழ்நாடு முழுவதும் மாவட்டச் செயலாளர்கள் முதல் கிளைக் கழக நிர்வாகிகள் வரை அனைவரிடமும் ரகசியமாக கருத்துக்களைக் கேட்டறிந்தனர். இதுதவிர ஸ்டாலினின் ஆலோசனைப்படி, ஆன்லைன் வாயிலாகவும் ஆயிரக்கணக்கான புகார்கள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டன.

திமுக கள ஆய்வு குழுவினர் நடத்திய கருத்து கேட்பில், கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் மாறாக திமுகவின் பலத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, அவர்களால் கட்சிக்குக் கூடுதல் வாக்குகள் கிடைக்கவில்லை என்று பலரும் தங்கள் ஆதங்கத்தையும், மனக்குமுறலையும் கொட்டியிருக்கிறார்கள். சில இடங்களில் திமுக உட்கட்சி பிரச்சனையை சரி செய்யவில்லை என்ற கருத்துகள் இருந்தது.

வெற்றி வாய்ப்புள்ள சில தொகுதிகளில் செல்வாக்கு உள்ள எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் சீட் வழங்காமல் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது தவறு என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

காரணம் இன்றி வேட்பாளரை மாற்றியது, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை வழங்கியதில் அதிருப்தி, தேர்தலின் போது சரிவர பணியாற்றாமல் ஒதுங்கி இருந்தது போன்ற பல்வேறு காரணங்களை கட்சி நிர்வாகிகள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

MK Stalin
MK Stalin

மேலும் தவெகவினர் தங்களின் பரப்புரைகளில் தொடர்ந்து திமுகவை கடுமையாக பேசி விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் திமுகவை சேர்ந்தவர்கள் பெரிதும் பதிலடி கொடுக்கவில்லை. மாறாக அதிமுக முன் வைக்கும் விமர்சனங்களுக்கே பதிலடி கொடுத்து வந்தார்கள். இதை வைத்து பார்க்கையில் திமுகவை சேர்ந்தவர்கள் தவெகவை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என ஒரு குற்றசாட்டு இருக்கின்றது. தவெகவிமர்சனங்களுக்கு பதில் தராததால் அவர்கள் முன் வைக்கும் விமர்சனங்கள் எல்லாம் உண்மைதானோ என்ற ஒரு மனநிலையும் மக்கள் முன் வந்திருக்கும். அதுவும் தோல்விக்கு ஒரு காரணமாம் அமைந்திருக்கும் என சொல்லப்படுகின்றது.

இதை 19 குழுவினரும் தொகுதி வாரியாக அறிக்கையாக தயார் செய்து அந்த அறிக்கையை ஆழ்வார்பேட்டை சென்று திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில் இனி வரும் தேர்தல்களில் அதாவது, நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் திமுக தனித்து களம் காண வேண்டும் என்று தொண்டர்கள் தங்களுடைய விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதுமட்டுமின்றி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும்போது அந்த தொகுதியில் அவர்களுக்கு செல்வாக்கு இருக்கிறதா? அவர்களால் வெற்றி பெற முடியுமா? என்று கழகத்தில் கீழ் மட்ட அளவிலும் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

திமுகவில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளதை அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

இன்று அறிக்கை சமர்ப்பித்த நிர்வாகிகளிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஆலோசனையும் நடத்தினார். அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும் தோல்விக்கான காரணங்களை வைத்துக்கொண்டு கட்சியில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் ? அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன ? என்பது குறித்து கட்சியினரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிகின்றது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆட்சி கவிழ்ந்தால் தேர்தலை சந்திக்க நாங்கள் தயார்! திமுக தயாராக உள்ளதா? – அமைச்சர் அருண்ராஜ்
மாதிரி படம்

திமுக ஒரு வேளை உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி தர்மத்தை விட கட்சியின் வளர்ச்சியே முக்கியம் என திமுக தலைமை முடிவெடுத்தால், அது வரும் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று திமுக நிர்வாகிகள் உற்சாகமாக தெரிவிக்கிறார்கள்.

logo
Kalki Online
kalkionline.com