சமூக ஊடகங்கள் மூலமாக குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து Meta நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்கிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டப்பட்டது. இதனையடுத்து மார்க் ஜூக்கர்பெர்க் நீதிமன்ற வளாகத்திலேயே பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
Meta, TikTok, X போன்ற பிற சமூக ஊடக நிறுவனங்களின் உயர்மட்ட நிர்வாகிகள் தங்கள் தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு மோசமாக இருப்பது குறித்து அமெரிக்க செனட் நீதித்துறை குழுவிடமிருந்து கடுமையான கேள்விகளை எதிர்கொண்டனர். சமூக வலைதளங்களில் குழந்தைகளின் மீது நடக்கும் வன்முறைகள், பாலியல் குற்றங்கள், மிரட்டல்கள் மற்றும் போதிய பாதுகாப்பின்மை கவலை அளிப்பதாக பலர் சமூக வலைதளங்களின் மேல் புகார் அளித்த நிலையில், விசாரணை நடத்தப்பட்டது.
குறிப்பாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களின் மீது குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்து அதிக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதால், செனட் குழு, மார்க் ஜூக்கர்பெர்கிடம் குழந்தைகள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த காணொளியையும் போட்டுக் காட்டினர்.
இந்த விசாரணையின் போது, நீதிமன்ற வளாகத்தில் சமூக வலைதளங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் ஏராளமாக திரண்டிருந்த நிலையில் அவர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியதால், மார்க் ஜூக்கர்பெர்கிடம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்கள் இங்கே உள்ளன. நீங்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்களா? எனக் கேட்டபோது, அவர் எதைப் பற்றியும் யோசிக்காமல், நீதிமன்ற வளாகத்திலேயே எழுந்து நின்று பெற்றோர்களிடம் நேரடியாக உரையாடத் தொடங்கினார்.
“நீங்கள் அனைவரும் அனுபவித்த அனைத்திற்கும் நான் வருந்துகிறேன்.
உங்கள் குடும்பம் அடைந்த துன்பத்தைப் போல வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது.
குழந்தைகளை பாதுகாப்பதற்கான தொழில்துறை அளவிலான முயற்சிகளில் மெட்டா தொடர்ந்து வேலை செய்து வருகிறது” என அவர் கூறினார்.
மேலும் நீதித்துறையை சேர்ந்த ஒருவர் உங்கள் தளங்களில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கத் தவறியதால் “உங்கள் கைகளில் ரத்தம் படிந்துள்ளது” எனக் குற்றம் சாட்டினர். மேலும் எக்ஸ் நிறுவன சிஇஓ Yaccarino, இணையத்தில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுவதற்கு குறிப்பிட்ட தொழிநுட்ப நிறுவனங்களே பொறுப்பேற்கும் STOP CSAM என்ற புதிய சட்டத்திற்கு தன் ஆதரவை வெளிப்படுத்தினார். இந்த சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை என்றாலும், இதற்கான ஆதரவை அனைவரும் அளித்து வருகின்றனர்.
குழந்தைகள் எந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்த நிகழ்வு மூலமாக நாம் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே பெற்றோர்களாகிய நீங்கள் சமூக வலைதளங்களின் கொடூர முகத்திடமிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.