உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துள்ள வாட்ஸ்அப் உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக உள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் செல்போனில் தவிர்க்க முடியாத செயலியாக இது மாறியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 3 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
காலையில் எழுந்து ‘Hi’, ‘Good Morning’ மெசேஜ் போடுவது முதல் இரவு ‘Good Night’ வரை வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புபவர்கள் ஏராளம். சிறிசு முதல் பெரிசு வரை அனைவருக்கும் பிடித்தமான வாட்ஸ்அப் சிறிது நேரம் வேலை செய்யவில்லை என்றாலும் உலகமே ஸ்தம்பித்து விடும்.
மெட்டா வழங்கும் வாட்ஸ்அப், ஓர் இலவசமான மெசேஜிங் மற்றும் வீடியோ அழைப்புச் செயலியாகும். ஆரம்பத்தில் குறுஞ்செய்தி அனுப்ப மட்டும் வந்த வாட்ஸ்அப், பின்னர் புகைப்படம், வீடியோ, கோப்பு பகிர்வு, குழு அரட்டை, ஸ்டேட்டஸ் என பல வசதிகளை அறிமுகப்படுத்தியது.
அந்த வகையில் வாட்ஸ் ஆப்பில், அடிக்கடி புதுப்புது அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்கும். அப்படிதான் வாட்ஸ்அப்பில், சமீபகாலமாக ஸ்டேட்டஸ் அப்டேட்களை போடுவது, மெசஜ்களை ஹைட் செய்வது போன்ற பல அப்டேட்கள் வெளியாகியிருக்கிறது. இதனால் பல போட்டி செயலிகள் வந்தாலும் வாட்ஸ்அப் தனி இடத்தை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் வருவாயை அதிகரிக்க மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் விளம்பரங்கள் டிஸ்ப்ளே செய்யப்பட உள்ளது. அதாவது, வாட்ஸ் ஆப்பில், ஸ்டேட்டஸ் பகுதியில் இனி விளம்பரங்களும் தோன்றும் என்று மெட்டா அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்களை பார்க்கும் போது, நடுநடுவில் சில விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கும், அதுபோன்ற அப்டேட்தான் தற்போது வாட்ஸ் அப்பிலும் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த சோதனையை, மெட்டா நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் தொடங்கிய நிலையில் தற்போது நடைமுறைப்படுத்தி உள்ளது.
தற்போது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களுக்கு மத்தியில் விளம்பரம் வருவது சிலருக்கு தொந்தரவாக இருப்பதாக பயனர்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர். இப்படி, விளம்பரம் இல்லாமல் வாட்ஸ் அப் சேவையை பெற வேண்டும் என்று விரும்பும் பயனர்கள் கட்டணம் செலுத்தும் நடைமுறையை அறிமுகம் செய்ய வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மெட்டாவின் இந்த அறிவிப்பு வாட்ஸ் அப் பயனர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
இந்த நடைமுறையை முதல் கட்டமாக, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், வாட்ஸ் அப்பை, விளம்பரம் இல்லாமல் பயன்படுத்த கட்டணமாக சுமார் ரூ.430 நிர்ணயிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இன்ஸ்டாவில் விளம்பரம் இல்லாமல் அக்கவுண்டை உபயோகிக்க Ad free subscription-ஐ ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மெட்டா அறிமுகம் செய்த நிலையில் தற்போது வாட்ஸ்அப்புக்கும் அந்த அப்டேட்டை கொண்டு வர முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பில் கட்டணம் செலுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டால், மக்கள் இந்த செயலியை பெரிதளவில் புறக்கணிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.