உத்தரப் பிரதேசத்தில் 20 வயது மாணவி ஒருவர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், மெட்டா (Meta) நிறுவனத்திடமிருந்து காவல் துறைக்கு ஒரு அவசரச் செய்தி (alert) வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் அவர் காப்பாற்றப்பட்டார். மாணவி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், பூச்சிக்கொல்லி மாத்திரைகளுடன் மனமுடைந்த நிலையில் ஒரு குறிப்பையும் வெளியிட்டிருந்தார். இந்த உடனடி செய்தி கிடைத்த 16 நிமிடங்களுக்குள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உயிரைக் காப்பாற்றினர்.
ஜனவரி 2023 முதல், உத்தரப் பிரதேசத்தில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தற்கொலை தொடர்பான பதிவுகள் குறித்த எச்சரிக்கைகளின் அடிப்படையில் 1,315 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது ஒரு பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இந்த சம்பவம் நடந்த அன்று மெட்டா நிறுவனம் உ.பி. காவல்துறையின் சமூக ஊடக மையத்திற்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியது. அதில் ஒரு கல்லூரி மாணவி பூச்சிக்கொல்லி பாக்கெட்டைப் படமெடுத்து, தற்கொலை எண்ணத்துடன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
இந்த எச்சரிக்கை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) ராஜீவ் கிருஷ்ணா விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மெட்டா பகிர்ந்த மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, பரேலி காவல்துறை மாணவியின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, சிபி கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அவரது வீட்டிற்கு ஒரு குழுவை அனுப்பியது.
காவல்துறையினர் அங்கு சென்றபோது, அந்த மாணவி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். “எச்சரிக்கை கிடைத்த 16 நிமிடங்களுக்குள், உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்கள் மாணவியின் வீட்டிற்குச் சென்றனர். அங்கே அவள் வாந்தி எடுத்தபடியும், மன உளைச்சலுடனும் காணப்பட்டாள்.” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மாணவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அவரது உடல்நிலை தேறியதும், இன்ஸ்டாகிராமில் ஒரு நபருடன் பழகியதாகவும், அவருடன் காதல் உறவில் இருந்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்தார். சண்டை காரணமாக அந்த நபர் அவளது எண்ணை ப்ளாக் செய்ததால், இந்த முடிவை எடுத்ததாக கூறினார். தான் உட்கொண்ட பூச்சிக்கொல்லியை தனது தந்தை கோதுமை சாகுபடிக்காக வாங்கியிருந்ததாகவும் மாணவி காவல்துறையிடம் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச காவல்துறை 2022 முதல் மெட்டாவுடன் இணைந்து ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தற்கொலை தொடர்பான பதிவுகள் குறித்த எச்சரிக்கைகளைப் பெறும் ஒரு அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறது.
இதுபோன்ற அமைப்பு இந்தியா முழுவதும் வந்தால், பல தற்கொலைகளை தடுத்து உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.