
உலகெங்கும் உள்ள காடுகளிலும் பரந்தவெளிகளிலும் வாழ்ந்து வரும் பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. இவை இடும் முட்டைகள் இனத்திற்கு இனம் வேறுபட்ட நிறம் கொண்டவைகளாக உள்ளன. எந்த எந்த பறவையின் முட்டை எந்த நிறத்தில் உள்ளது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. அமெரிக்கன் ராபின்: ஊதாவும் பச்சையும் கலந்ததொரு தனித்துவமான நிறத்தில் முட்டை இடும் பறவை இது. மென்மையான, பளபளவென மின்னும் ஓடுடைய பச்சை நிற முட்டைகள், பசுமையான இலைகள் சூழ்ந்த கூட்டினுள் இருக்கும்போது, இவை இலைகள் போல தோற்றமளித்து, எதிரிகள் ஏமாறவும் வழி காட்டுகின்றன. ஒரு குறிப்பிட்ட பொருளின் நிறத்தை, குறிப்பிட்டுச் சொல்லும்போது, 'ராபின் ப்ளூ' என்று கூறும் அளவுக்கு இதன் முட்டை பிரசித்தி பெற்றது.
2. ஈமு: ஈமுவின் முட்டை பெரிய அளவில், சமதளமற்று, பச்சை கலந்த ஊதா நிறத்தில் இருக்கும். சுமார் அரை கிலோ எடை கொண்ட ஈமுவின் முட்டை வேறு எந்தப் பறவையின் முட்டையின் எடையை விடவும் அதிக எடையாகும். ஆஸ்திரேலியாவின் புதர் காடுகள் ஈமு முட்டை இட தகுந்த இடமாக அமைந்துள்ளது.
3. காஸோவரி (Cassowary): காஸோவரி பறவையின் முட்டை பிரகாசமான, கண்கவர் பச்சை நிறமானது. சுற்றுச்சூழலில் நிறைந்துள்ள பசுமையான இலைகளின் நிறத்தை ஒத்திருக்கும். இந்த நிறம் எதிரிகளிடமிருந்து முட்டைகளைப் பாதுகாக்க உதவுகிறது. வெப்பநிலைக் காடுகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் அடையாளமாகக் காணப்படும் காஸோவரியின் கவர்ச்சிகரமான, மண்ணின் சாயல் முட்டைகளிலும் காணப்படும்.
4. கிரேட் ப்ளூ ஹெரான்: இப்பறவையின் முட்டைகள், அது வாழ்கின்ற நீர்நிலைகள் நிறைந்த சுற்றுச்சூழலுக்குப் பொருந்தும் வகையில் வெளிர் நீல நிறம் கொண்டுள்ளன. ஹெரான் வகைப் பறவைகள் ரூகரீஸ் (Rookeries) எனப்படும் காலனிகளாக வாழ்பவை. உயர்ந்து வளர்ந்த மரங்களின் உச்சியில் கூடு கட்டி இவை முட்டை இடுகின்றன.
5. ஹம்மிங் பேர்ட்: ஹம்மிங் பேர்ட், பறவை இனத்திலேயே மிகச்சிறிய அளவிலான முட்டைகளை இடுகின்றன. இந்த முட்டைகள் வெள்ளை நிறத்தில் சில வெளிர் நிற திட்டுக்கள் உடையதாக இருக்கும்.
6. சிக்கன் (பாரம்பரிய இனம்): எல்லா கோழிகளும் வெள்ளை அல்லது பிரவுன் நிற முட்டைகளை இடுவதில்லை. அரகானா (Araucanas) இன கோழிகள் நீலம் அல்லது பச்சை நிற முட்டைகளை இடுகின்றன. மாறன் வகைக் கோழிகள் டார்க் சாக்லேட் பிரவுன் நிற முட்டைகளையும், ஆலிவ் எக்கர்ஸ் (Olive Eggers) ஆலிவ் க்ரீன் நிறத்தில் முட்டைகளையும் இடுகின்றன.