

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு, உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது மெட்டா நிறுவனம் 1,500 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இந்தப் பணி நீக்கம் பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இல்லாததே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் செலவு குறைப்பு நடவடிக்கையாக இந்தப் பணி நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தாய் நிறுவனம் தான் மெட்டா. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது மெட்டா நிறுவனம் இந்தப் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பது பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் மெட்டா நிறுவனம் 3,000 பேரையும், அக்டோபர் மாதத்தில் 600 பேரையும் பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பணி நீக்க நடவடிக்கை குறித்து மெட்டா நிறுவனம் தெரிவிக்கையில், “கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ரூ.5.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. இந்நிலையில் நிறுவனத்தின் பல்வேறு செலவுகளை குறைக்கும் வகையில், தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 1,500 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கனவுத் திட்டமான ரியாலிட்டி லேப்ஸ் பிரிவில் தான் தற்போது ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. சுமார் 15,000 பேர் பணிபுரியும் இந்தப் பிரிவில் 1,500 பேரை அதாவது 10% பணியாட்களை வீட்டிற்கு அனுப்ப மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் ஏஐ துறையில் கூடுதல் கவனம் செலுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பம் உலக அளவில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
அனைத்து துறைகளிலும் இதன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பணியாளர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வது அவசியம் என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் பணியாளர்களின் இடத்தை ஏஐ தொழில்நுட்பம் பிடித்து விடும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் ஏஐ தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ளவில்லை என்றால், வருங்காலத்தில் வேலையை இழக்கும் அபாயம் ஏற்படும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் மெட்டா நிறுவனத்தில் நடந்துள்ள பணி நீக்க நடவடிக்கை, மற்ற நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக முன்னணி ஐடி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருவதால், தங்களது வேலையை உறுதி செய்து கொள்ள பணியாளர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தற்போது நிகழ்ந்து வரும் பணி நீக்க நடவடிக்கைகளைக் கண்டு அதிர்ச்சி அடையாமல், விழிப்புணர்வுடன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான திட்டமிடலை பணியாளர்கள் முன்னெடுக்க வேண்டும்.