தென்சென்னையின் முக்கியமான பகுதியாக விளங்கும் வேளச்சேரியில் திட்டமிடப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. தாம்பரம் - வேளச்சேரி - கிண்டி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த உள்ளதால், இந்த மேம்பாலத் திட்டம் அதற்கு இடையூறாக இருக்கும் என்று கருதியே இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
வேளச்சேரியில் ஃபீனிக்ஸ் மால் முதல் டிமார்ட் வரை பொழுதுபோக்கு, சில்லறை விற்பனை, கல்வி, சுகாதாரம், பொதுப் போக்குவரத்து எனப் பல்வேறு வசதிகள் பொது மக்கள் பயன்பாட்டுக்காக எளிதில் கிடைக்கின்றன. அதனால் அப்பகுதியில் வாகங்னகளின் போக்குவரத்து நெரிசலும் தினமும் அதிகரித்தக் கொண்டே இருக்கிறது.
குறிப்பாக குருநானக் கல்லூரி சிக்னலில் இருந்து கிண்டி செல்லும் ஐந்து பர்லாங் தொலைவிலான சாலையில் பீக் ஹவர்களில் கடும் வாகன நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. மேலும் விஜயநகர் பேருந்து நிலையத்தில் இருந்தும் ஏரிக்கரை வழியாக ஃபீனிக்ஸ் மால் செல்லும் வழியிலும் இந்த நெருக்கடியை பார்க்க முடிகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் வேளச்சேரி – ஐந்து பர்லாங் சாலை இடையில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு 310 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. 5.5 மீட்டர் அகலத்தில் ஒரு திசையில் மட்டும் அமைக்கப்படும் இந்த சாலை, வேளச்சேரி செக்போஸ்ட் பேருந்து நிறுத்தத்தை நெருங்கும் போது இரண்டாக பிரியும்.அங்கிருந்து கிண்டி பாலம் மற்றும் ஆளுநர் மாளிகை நோக்கி செல்லும் வழியில் இந்த சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜனவரியில் தொடங்கும் இதற்கான பணிகள் விரைவில் முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாலம் பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் வேளச்சேரிப் பகுதியைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படும். நிலையில், வேளச்சேரியில் இருந்து ஐந்து பர்லாங் சாலை இடையிலான புதிய மேம்பாலத் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.காரணம், தாம்பரம் – வேளச்சேரி – கிண்டி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் திட்டம் வருகிறது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் போது வேளச்சேரி மேம்பால திட்டம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாக தகவல்கள் கூறப்படுவது ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுபற்றி சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி வேளச்சேரி – ஐந்து பர்லாங் சாலை இடையிலான மேம்பால திட்டம் பயன் தராது என்றும் இந்த பாலம் அமைப்பதால் நெருக்கடி மேலும் அதிகரிக்கத் தான் செய்யும் சிலர் கூறிவருகின்றனர்.
புதிய மேம்பால திட்டத்திற்கு பதிலாக வேளச்சேரி – ஐந்து பர்லாங் சாலை இடையில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையை அகலப்படுத்துவதற்கு பதிலாக,அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதும். போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறைந்து விடும் என்னும் கருத்தும் பொதுமக்களால் முன்வைக்கப்படுகிறது. மேலும், தாம்பரம் – வேளச்சேரி – கிண்டி ரூட்டில் மெட்ரோ ரயில் திட்டம் வருவதால் இதைப் பயன்படுத்துவதால் சாலைகளில் நெரிசல் குறையும் வாய்ப்பிருப்பதாக சுட்டிக் காட்டுகின்றனர். இது சார்ந்து சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையும் எடுக்கப்போகும் நடவடிக்கையை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எது எப்படியோ சென்னை வேளச்சேரியில் அன்றாடம் பெருகிவரும் போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வு ஒன்று கிடைத்தால் போதும் என்று அப்பகுதி மக்கள் விடும் ஏக்கப் பெருமூச்சினை நம்மால் நன்கு உணர முடுகிறது.