
மேட்டூர் அணை தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஓர் அணையாகும். இது சேலம் மாவட்டத்தில் மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளது.இந்த அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் இது அழைக்கப்படுகிறது. இந்த அணை 1934ல்கட்டி முடிக்கப்பட்டது. மேட்டூர் அணை கட்டும் பணியில் ஒன்பது ஆண்டுகாலம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது கட்டி முடிக்கப்பட்டபோது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது. அணையின் அதிகபட்ச உயரம் மற்றும் அகலம் முறையே 214 மற்றும் 171 அடி ஆகும். அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடி ஆகும்.
மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணா ராஜா சேகர அணையிலிருந்தும் நீர் வருகிறது. மேட்டூர் அணையில் 2 நீர் மின் நிலையங்கள் உள்ளன. மேட்டூர் அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்களாகும். இதன் கொள்ளளவு 93.4 டி.எம்.சி. (1 டி.எம்.சி = 100 கோடி கன அடி) ஆகும்.
மேட்டூர் அணையின் உயரமான 124 அடியில்நீரை தேக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட உயரம் 120 அடி ஆகும்.அணையின் முழுக் கொள்ளளவு 124 அடிக்கு 9,347 கோடி கன அடி தண்ணீர் ஆகும்.
மேட்டூர் உபரி நீர் திட்டம் என்பது மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை சேலம் மாவட்டம் சரபங்கா பகுதியில் உள்ள 100 ஏரிகளில் நிரப்பும் திட்டமாகும். இத்திட்டம் 2019 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வரால் 545 கோடி ரூபாய் செலவில் அறிவிக்கப்பட்டது.இத்திட்டப்படி மேட்டூரில் இருந்து உபரி நீர் கால்வாய் மூலம் திப்பம்பட்டியில் உள்ள நீரேற்றும் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.
திப்பம்பட்டியில் நீரேற்றும் நிலையத்தில் 940 குதிரை திறன் கொண்ட 10 மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு குழாய்கள் மூலம் 12 கி.மீ தொலைவில் உள்ள எம்.காளிப்பட்டி ஏரியிலும், 1080 குதிரை திறன் கொண்ட 6 மோட்டார்கள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு குழாய்கள் மூலம் நங்கவள்ளி ஏரியிலும் நீர் நிரப்பப்படும். எம்.காளிப்பட்டி மற்றும் நங்கவள்ளி ஏரிகளின் நீர் திறப்பின் மூலம் மற்ற ஏரி மற்றும் குட்டைகளில்இந்நீர் நிரப்பப்படும்
எம்.காளிப்பட்டி ஏரியில் அமைக்கப்படும் மற்றொரு நீரேற்று நிலையத்தின் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு 5 கி.மீ தூரம் குழாய்கள் மூலம் கீழ் நிலை நீர்த்தொட்டிக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மற்ற ஏரிகளில் நீர் நிரப்பப்படும். இந்தத் திட்டத்தால் 4 ஆயிரத்து 240 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு 38 கிராமங்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.இத்திட்டம், 2021 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது
இந்நிலையில் மேட்டூர் அணையில் 2வது ஆண்டாக நீர்மட்டம் தற்போது 100 அடியை எட்டி உள்ளது. இப்போது 7வது முறையாக தண்ணீர் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் டெல்டாப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேட்டூர் அணையின் மூலம் 13 டெல்டா மாவட்டங்களில் 17.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன.
மேட்டூர் அணை நடபாண்டில் - ஜூன் 29, ஜூலை 5, ஜூலை 20 ,ஜூலை 2,5 ஆகஸ்ட் 20, செப்டம்பர் 2 என ஆறு முறைகள் இதுவரை திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனால் மேட்டூர் அணையில் நீர்வரத்து கடந்த ஐந்து தினங்களாக படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வந்தது.தொடர்நீர் காரணமாக மேட்டூர் அணை நடபாண்டில் ஏழாவது முறையாக நிரம்பியுள்ளது.
தொடர்ந்து அணைக்கு வரும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அணையிலிருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணையைச் சுற்றியுள்ள தங்கமாபுரி பட்டினம், சேலம் கேம்ப், ஆர் எஸ் புரம் ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். கடந்தாண்டு அக்டோபர் 23 ல் 100 அடி உயர்ந்தது தொடர்ந்து இன்று 365 வது நாளாக ஓராண்டு நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடிக்கிறது. இரண்டாவது ஆண்டாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் நீடிப்பது விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.