Vaazhai
Vaazhai

தூத்துக்குடியில் அடித்த சூறாவளி காற்றால் லட்சக்கணக்கில் வாழை மரங்கள் சேதம்!

Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து சில நாட்களாகவே பலத்த மழையுடன் கூடிய சூறாவளி காற்று வீசி வருகிறது. இதனையடுத்து லட்சக்கணக்கிலான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மேலாத்தூர், ஆவரையூர், தலைவன்வடலி, கீரனூர், சேர்ந்தபூமங்கலம், புன்னைசாத்தான்குறிச்சி, சேதுக்குவாய்த்தான் உட்பட்ட கிராமங்களில் 800 ஏக்கர்களில் சுமார் 7 லட்சம் வாழைகள் பயிரிடப்பட்டிருந்தன. இவையனைத்தும், அறுவடைக்காக தயார் நிலையில் இருந்தன.

இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவில் பலத்த சூறாவளி காற்றுடன் சேர்ந்து மழையும் சுமார் 1 மணி நேரமாக நீடித்தது. இதனால், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடின. ஏற்கனவே போன வருடம் டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக கால்வாய் கரைகள் மராமத்து செய்யாமல் இருந்தன.

ஆகையால், அதிக மழைநீரினால் கால்வாய்கள் மேலும் சிதைந்து, இதனால் வெள்ளமாக மாறி வாழைத்தோட்டங்களில் புகுந்தது.  அதேநேரத்தில் சூறாவளி காற்று காரணமாக வாழைகள் சாயத் தொடங்கியது. இந்த வகையில் இப்பகுதியில் மட்டும் ஒரு லட்சம் வாழைகள் குழைதள்ளிய நிலையில் தரையில் விழுந்து சேதமடைந்தன. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களாக தோட்டங்களில் சேதமடைந்து கிடக்கும் வாழைகளை விவசாயிகள் கண்ணீருடன் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் பேசுகையில், “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால், பெரிய இழப்பை சந்தித்தோம். கால்வாய்கள் கரைகள், மற்றும் குளம் ஆகியவை பெரிய அளவு சேதமாகின.  இதனை மராமத்து செய்ய சொல்லி நாங்கள் முன்பே கூறினோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாத பட்சத்தில், தற்போது ஏற்பட்ட சூறாவளி காற்றால், மீண்டும் ஒரு பேரிழப்பை சந்தித்துள்ளோம்.

இதையும் படியுங்கள்:
இன்று முதல் வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாமல் மெசேஜ் வராது… ட்ராய் போட்ட உத்தரவு!
Vaazhai

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வாழைத்தோட்டங்களில் முறையாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைவெள்ளத்தில் சேதமடைந்துள்ள குளங்கள், கால்வாய்களை சீரமைப்பதுடன், கரைகளை பலப்படுத்தவும் விரைவாக பணிகளை தொடங்க வேண்டும்.” என்று பேசினர்.

logo
Kalki Online
kalkionline.com