
இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அனைத்துமே குறைந்தபட்ச இருப்புத் தொகை விஷயத்தில் தனித்து தான் முடிவெடுக்கின்றன. ஒவ்வொரு வங்கியும், வங்கிகளின் விதிமுறைக்கு ஏற்ப வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயம் செய்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரூ.250 ஆக இருந்த குறைந்தபட்ச இருப்புத் தொகை தற்போது ரூ.50,000 வரை உயர்ந்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் பல வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.5,000 மற்றும் ரூ.10,000 என நிர்ணயித்துள்ளன. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஐசிஐசிஐ வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.50,000 ஆக உயர்த்தி வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
ஐசிஐசிஐ வங்கியின் இந்த நடவடிக்கையால், வாடிக்கையாளர்கள் பலரும் சேமிப்புக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்றி விடலாமா என்று கூட நினைக்கின்றனர். இந்நிலையில் மினிமம் பேலன்ஸ் குறித்து இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இருக்கும் மெஹ்சானா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் மினிமம் பேலன்ஸ் குறித்த கேள்விக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், “வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதில் வங்கிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது.
மினிமம் பேலன்ஸ் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி என்றுமே தலையிடாது. ஏனெனில் அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அதாவது மினிமம் பேலன்ஸை நிர்ணயம் செய்வது ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை வரம்புக்குள் வராது. இதற்கான முழு உரிமையை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. வங்கிக்கு வங்கி மினிமம் பேலன்ஸ் நிர்ணயம் வேறுபடுகிறது. ஒருசில வாடிக்கையாளர்கள் மினிமம் பேலன்ஸை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என வங்கிகள் விலக்கும் அளித்துள்ளன” என்று அவர் கூறினார்.
ஐசிஐசிஐ வங்கி குறைந்தபட்ச இருப்புத் தொகையை 5 மடங்காக உயர்த்திய நிலையில், மத்திய நிதி அமைச்சகம் உடனடியாக தலையிட்டு இதனைத் தடுக்க வேண்டும் என ஒரு சமூக அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியைப் போலவே மற்ற வங்கிகளும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்தினால், அது பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பாக அமைந்து விடும்.
இந்நிலையில் மினிமம் பேலன்ஸை வங்கிகளே நிர்ணயிக்கும் அதிகாரத்தை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளதாக பிரபல தனியார் வங்கி ஒன்று தெரிவித்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி ஆளுநரும் இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று இன்று தெரிவித்துள்ளார்.