

தமிழக அரசு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்ட தமிழ்நாடு திரைப்பட மக்கள் தொடர்பு அலுவலர்கள் (PRO) சங்கத்தின் நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் பிஆர்ஓ சந்திப்பு நிகழ்ச்சி (ஜூலை 27 ) சென்ற திங்கள் கிழமை சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் நகைச்சுவையாகவும் கலகலப்பாகவும் பேசிய வீடியோ பதிவுகள் வைரலாக வலம் வருகின்றன.
திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆர். கே. செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட மக்கள் தொடர்பு அலுவலர்கள் (TTPT) சங்கத்தின் புதிய நிர்வாகிகள், திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்களான பிஆர்ஓ க்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் கலந்து கொண்ட அந்நிகழ்வு அமைச்சர் ராஜ்மோகனின் சுவாரஸ்யமான பேச்சால் அனைவருக்கும் மகிழ்வான தருணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
அறிமுக உரையில் நிகழ்வில் தொகுப்பாளினி ராஜ்மோகனின் தவிர்க்க முடியாத வளர்ச்சியைக் குறிப்பிட்டு ரேடியோ முதல் அமைச்சர் வரை மாறாத இயல்பு கொண்டவர் என்றும் பார்க்கத்தான் சாஃப்ட் ஆனால் பேசும் போது அனலும் நக்கலும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் என்றும் தனித்துவமாக தன்னுடைய அடையாளத்தை பதிப்பவர் என்றும் அளித்த நீண்ட பாராட்டுரையை கிண்டல் செய்த அவர், "இரவு 9:45 மணிக்கு இந்த அறிமுகம் தேவையா?" என்று மேடையிலேயே நகைச்சுவையாகக் கலாய்த்தார்.
மேலும் மற்றோரு நிகழ்வு காரணமாக தனது வருகை தாமதம் ஆயிற்று என மன்னிப்பு கேட்டு நேரம் ஆவதால் சுருக்கமாக தனது உரையை முடிக்கிறேன் எனக் கூறி திரைப்படத் துறை, ஊடகங்களின் பங்கு மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணியின் முக்கியத்துவம் குறித்து உவமைகளுடன் பேசி கைதட்டல் பெற்றார். மேலும் தான் ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்தவன் என்றும், பலமுறை திட்டு வாங்கியுள்ளேன் என்றும் வழக்கம் போல ஜாலியாகப் பேசி வந்திருந்தவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தினார்.
தமிழ்த் திரைப்படத் துறை வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல; சமூக மாற்றத்திற்கும் முக்கிய பங்காற்றும் துறையாக உள்ளது என்றவர் முதல் அமைச்சருடன் நடந்த முதல் சந்திப்பு மற்றும் ஆலோசனைகள் குறித்த சுவாரஸ்யமானத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
எஃப் எம்,டிவி,சோஷியல் மீடியா, யூடியூப் என இயங்கியபோது அனைவரிடமும் திட்டு வாங்கிய ஒருத்தன் நான்.
மேடை மேடையில் இருக்கும் ஜாம்பவான்களும் இங்கு இருக்கும் பி ஆர் ஓ மக்களுக்கும் நல்ல தமிழில் ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றால் முதலில் அணுகுவது மலிவு விலை தொகுப்பாளரான என்னைத் தான்.
5 வருடங்களுக்கு ஒரு முறை விருது தருவதை விட இனி ஒவ்வொரு வருடமும் வெள்ளித்திரை,சின்னத்திரை,தமிழ் திரை விருதுகளை வழங்க வேண்டும் என மாண்புமிகு முதல்வரிடம் கூறி உள்ளேன்.முதல் மீட்டிங் முடிந்ததும் முதல்வர் அவர்கள் என்னை அழைத்தார்.மானியம் பெறாமல் பெண்டிங்கில் இருக்கும் சிறு சிறு படங்களுக்கு அரசு சார்பில் உடனடியாக மானியம் தருமாறு உத்தரவிட்டார். அவருக்கு இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றிகளை கூறுகிறேன் என்றார்.
நல்ல படைப்புகள் ஒவ்வொன்றும் தமிழ் சினிமாவின் ஆக்சிஜன்.ஒரு தமிழ் சினிமாவின் தலையாக விளங்க கூடியவர்கள் தயாரிப்பாளர்கள்.இவர்கள் இல்லை என்றால் சினிமா இல்லை.பேமெண்ட் விஷயத்தில் சிறு குறைகள் இருந்தாலும் அடுத்த படத்தில் அதை சரி செய்து விடுவார்கள். எந்தத் துறையில் தான் இல்லை பேமெண்ட் பிரச்சினை?
சினிமா கலைஞர்களை உடலின் உறுப்புகளுடன் ஒப்பிட்ட அமைச்சர்:
தமிழ்த் திரைப்படத் துறை என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், சமூக மாற்றத்திற்கும் முக்கிய பங்காற்றும் துறையாக விளங்குவதாக குறிப்பிட்ட அமைச்சர் ராஜ்மோகன், திரைக்கலைஞர்களை உடலின் உறுப்புகளுடன் ஒப்பிட்டு பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது:
தலை (தயாரிப்பாளர்கள்): "ஒரு தமிழ் சினிமாவின் தலையாக விளங்குபவர்கள் தயாரிப்பாளர்கள். இவர்கள் இல்லை என்றால் சினிமா இல்லை."
கைகள் (இசையமைப்பாளர்கள் & பாடலாசிரியர்கள்): "படம் கதையால் ஓடியதா அல்லது இளையராஜாவின் இசைக்காக ஓடியதா என்றே தெரியாத பல மேஜிக் படங்கள் உண்டு."
கால்கள் (சண்டை & நடன இயக்குநர்கள்): "ரத்தத்தை வியர்வையாக சிந்தி ஓடி ஓடி உழைப்பார்கள்."
வயிறு (தயாரிப்புத் துறை - Production): "கேரவனுக்குள் இருக்கும் 15 பேரா இருந்தாலும் சரி, கேரவனுக்கு வெளியே இருக்கும் 500 பேரா இருந்தாலும் சரி, அத்தனை பேரின் பசியையும் பொறுப்புடன் கவனிப்பவர்கள்."
ரத்தம் (பிஆர்ஓ-க்கள்): "படத்தின் விளம்பரத்திற்காக ஓயாமல் ஓடிக்கொண்டே இருப்பவர்கள்."
இதயம் (இயக்குநர்கள்): "தன்னுடைய இதயத்தை பற்றி கவலைப்படாமல், நல்ல சினிமாவை தர இடைவிடாமல் இயங்குபவர்கள்."
ஆக்ஸிஜன் (துணை இயக்குநர்கள்): "இயக்குநர் இல்லாமல் கூட இரண்டு நாள் படப்பிடிப்பு நடத்திவிடலாம்; ஆனால், உதவி இயக்குநர்கள் இல்லாமல் ஒரு ஷாட் கூட எடுக்க முடியாது."
அமைச்சரின் இந்தப் பேச்சை பாராட்டிய இயக்குநர் சேரன், "இந்த துறையை முழுமையாக புரிந்துகொண்ட ஒருவர் எங்களுக்கு அமைச்சராக கிடைத்துள்ளார். இவரை அமைச்சராக்கிய முதலமைச்சருக்கு பெரிய ஹேட்ஸ் ஆஃப்! சினிமா பிரச்சனைகளை இவரால் நிச்சயமாக தீர்க்க முடியும்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மொத்தத்தில், பிஆர்ஓ யூனியன் விழாவை தனது கலகலப்பான பேச்சால் உயிர்ப்பித்ததுடன், சினிமா மீதான அக்கறையையும் வெளிப்படுத்திய அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரையுலகினர் பலர் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.