பத்தாவது இடத்திலிருந்து நம்பர் 2 இடத்துக்கு முன்னேறும் அமைச்சர் உதயநிதி

பத்தாவது இடத்திலிருந்து  நம்பர் 2 இடத்துக்கு முன்னேறும் அமைச்சர் உதயநிதி

தமிழக அமைச்சரவை கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக அமைச்சரவையில் அறிமுகமான உடனே பத்தாவது இடத்தில் அமர்ந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அறிவிக்கப்படாத இரண்டாவது இடத்தை உறுதி செய்துவிட்டதாக சொல்கிறார்கள் கோட்டை வட்டாரங்களில்.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் அவ்வப்போது அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிட்டு வருகிறார். அரசு இயந்திரத்தின் வேகம் எக்காரணத்தைக் கொண்டும் குறைந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

கோட்டையிலிருந்து முதல்வர் எத்தனையோ திட்டங்களை மக்களுக்காக வகுத்தாலும், அறிவித்தாலும், அவையெல்லாம் அடித்தட்டு மக்கள் வரை சென்று சேர வேண்டும் என்று பணிகளை முடுக்கிவிட்டாலும், அரசின் நடவடிக்கைகளை மக்கள் எடைபோடுவது குறிப்பிட்ட சில இடங்களில் தான்.

பொது மக்கள் நேரடியாக அரசு அலுவலகங்களுக்கு செல்லும் சமயங்களில் அங்குள்ள அதிகாரிகள், அரசு அலுவலர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் ஆட்சியை மதிப்பிடுவார்கள்.

அந்த வகையில் கிராம நிர்வாக அதிகாரி, வட்டாட்சியர், பத்திரப் பதிவாளர், ரேஷன் கடை ஊழியர்கள், உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோரின் பணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் இது தொடர்பாக சில அறிவுறுத்தல்களை ஏற்கெனவே வழங்கிய நிலையில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் மூலம் அவரே நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் முதலமைச்சர் நேரடியாக சென்று அரசு பணிகள் குறித்து பார்வையிட முடியாது. இதனாலே உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். .

உதயநிதி ஸ்டாலின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சராக இருப்பதால் அவர் தமிழ்நாடு முழுவதும் சென்று முத்திரை திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்று ஆய்வு மேற்கொள்கிறார். இதன்மூலம் அமைச்சர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் தனக்கு அடுத்து இவர் தான் என முதல்வர் ஸ்டாலின் சொல்லாமல் சொல்கிறார் என்கிறார்கள்.

பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் கடந்த வாரம் இரு கூட்டங்கள் நடைபெற்றன. இதில் அந்தந்த துறைச் செயலாளர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால் அமைச்சர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதன் மூலம் அமைச்சர் உதயநிதிக்கான முக்கியத்துவத்தை அதிகாரிகளிடையேயும் காட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள்.

அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் என அனைத்து தரப்பிலும் தனக்கு அடுத்த இடத்தில் உதயநிதி ஸ்டாலின் தான் இருக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் தனது செயல்கள் மூலம் சொல்லி வருகிறார். ‘நம்பர் 2 இடத்துக்கு உதயநிதியை கொண்டு வருவதில் எங்களுக்கு பிரச்சினை இல்லை, ஆனால் எங்களுக்கான முக்கியத்துவத்தை குறைக்காமல், எங்கள் கையை கட்டிப்போடாமல் இருந்தால் போதும்’ என்று அமைச்சரவையில் உள்ளவர்கள் கிசுகிசுப்பதாக கோட்டை வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com