

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆனந்த் கூறினார்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 16 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
முன்பு எதிர்க் கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைத் தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சந்தித்துப் பேசிய இன்றைய முதல்-அமைச்சர் விஜய் இப்போது அவர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ராஜ்மோகன், தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை எனது அறைக்கு இருமுறை அழைத்து தலா மூன்றரை மணி நேரம் விரிவாகப் பேசியுள்ளேன் என்றார். மேலும் அரசு ஆவணங்கள் அனைத்தும் தயாராகி விட்டதால் வெகு விரைவில் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு நல்வழி பிறக்கும் என்று உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில்,போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுடன் சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல்குமார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் அரசு சார்பில் அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
தங்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆனந்த் கூறினார்.
ஆட்சிக்கு வந்து 3 மாதமாகிறது, கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுள்ளனர், உங்கள் கோரிக்கைகள் நியாயமானது, ஆனால் கஜானா இருக்கிறது, காசு இல்லை அமைச்சர் அமைச்சர் ஆனந்த் கூறினார்.
தூய்மை பணியாளார் போராட்டம் போல் இல்லாமல், மாநாடு போல் இருப்பதாக கூறிய அமைச்சர் ராஜ்மோகன், கஜானா காலி என அமைச்சர் ஆனந்த் கூறினார், ஆனால் கஜானா காலியாகவில்லை, காணாமல் போய்விட்டது என்று கூறினார்.
மேலும் அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா பேசும் போது, நாங்கள் 4 பேர் அல்ல 5 போர் இங்கு இருக்கிறோம், முதல்வரின் மனம் இங்குதான் உள்ளது என்று கூறினார்.
உங்களுடன் சேர்ந்து போராட வேண்டும் என தோன்றுகிறது. நாங்கள் அமைச்சர்கள் என்ற எண்ணமே இல்லை என்று கூறிய அவர், கடந்த ஆட்சியில் கடன் வாங்கி ஊழல் செய்தனர். நாங்கள் கடன் வாங்கி நல்லது செய்து வருகிறோம் என்றார்.