

சென்னையில் உழைப்பவர் உரிமை இயக்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கை மனுக்களை முதல்வர் நேரடியாகப் பெறுவதற்கு சந்திப்பு நேரம் ஒதுக்கக் கோரியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 15 நாள்களுக்கும் மேலாக அவர்கள் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டட கிழக்குப் பகுதி வாயிலில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
முன்பு எதிர்க் கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைத் தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சந்தித்துப் பேசிய இன்றைய முதல்-அமைச்சர் விஜய் இப்போது அவர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ராஜ்மோகன், தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை எனது அறைக்கு இருமுறை அழைத்து தலா மூன்றரை மணி நேரம் விரிவாகப் பேசியுள்ளேன் என்றார். மேலும் அரசு ஆவணங்கள் அனைத்தும் தயாராகி விட்டதால் வெகு விரைவில் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு நல்வழி பிறக்கும் என்று உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுடன் சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று காலை 11.30 மணிக்கு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், நிர்மல்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் அரசு சார்பில் அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அமைச்சர்களை கண்டதும் ஆரவாரத்துடன் தூய்மை பணியாளர்கள் வரவேற்ற நிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் தங்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அப்போது பேசிய அமைச்சர் ஆனந்த், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதம் தான் ஆகிறது, கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுள்ளனர். கஜானா தான் இருக்கு, அதுல ஒன்னும் இல்ல. உங்கள் கோரிக்கைகள் நியாயமானது தான்.
பழைய ஆட்கள் கஜானாவை காலி செய்துள்ள நிலையில், மக்கள் வரிப்பணத்தை கஜானாவில் சேர்த்து கோரிக்கையை நிறைவேற்றுவோம். மேலும் சிரித்த முகத்தில் அமைச்சர்களாகிய எங்களை வரவேற்ற தூய்மை பணியாளர்களுக்கான அனைத்தையும் செய்வோம் என அவர் உறுதி அளித்தார்.
மக்களுடைய பணத்தை நாங்கள் யாரும் தொடாமல் பத்திரமாக வைத்து உங்களுடைய கோரிக்கைகளை உங்களுடன் கலந்து பேசி எதை எதை எல்லாம் செய்ய முடியுமோ அதை செய்து தருவோம்’ என்றார்.
இது தூய்மை பணியாளார் போராட்டம் போல் இல்லாமல், மாநாடு போல் இருப்பதாக கூறிய அமைச்சர் ராஜ்மோகன், ‘15 நாட்களாக யாருக்கும் இடையூறின்றி ராணுவ ஒழுக்கத்துடன் போராடிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகள் என்று கூறினார்.
மேலும் கஜானா காலி’ என அமைச்சர் ஆனந்த் கூறினார், ஆனால் ‘கஜானா காலியாகவில்லை, காணாமல் போய்விட்டது’ என்று கூறினார்.
அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா, நாங்கள் 4 பேர் அல்ல 5 போர் இங்கு இருக்கிறோம், முதல்வரின் மனம் இங்குதான் உள்ளது, தூய்மை பணியாளர்கள் போராட இங்கே அமருவதால் முதல்வர் விஜய்க்கு தூக்கம் வருவதில்லை என்று கூறினார்.
போராடிய தூய்மை பணியாளர்களை கடந்த திமுக ஆட்சியில் கைது செய்தது. ஆனால் தற்போதைய முதலமைச்சர் ஒருவர் மீதும் கை வைக்கக் கூடாது என கூறி உள்ளார். மேலும் நாங்கள் ஆட்சி அமைந்து 100 நாட்கள் தான் ஆகிறது, எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் தாருங்கள், தூய்மை பணியாளர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறினார்.
உங்களுடன் சேர்ந்து போராட வேண்டும் என தோன்றுகிறது. நாங்கள் அமைச்சர்கள் என்ற எண்ணமே இல்லை என்று கூறிய அவர், கடந்த ஆட்சியில் கடன் வாங்கி ஊழல் செய்தனர். நாங்கள் கடன் வாங்கி நல்லது செய்து வருகிறோம் என்றார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது, இது உங்கள் அரசாங்கம். தூய்மை பணியாளர்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறோம். உங்களை வருத்திக் கொள்ள வேண்டாம், உங்களுக்கு செய்வதற்காக தான் இந்த தவெக அரசு உள்ளது என்று உறுதி அளித்தார்.
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து கலந்து பேசி விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆனந்த் கூறினார்.