
மதுரை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், சாதி சான்றிதழ், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருப்பதற்கான வருமான சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவம், பல் மருத்துவம், என்ஜினீயரிங் படிப்புகள், பி.எச்.டி., முதுநிலை பட்டப்படிப்புகள் ஆகியவற்றுக்கு உரிய அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மதிப்பெண்கள் (எஸ்.ஏ.டி., ஜி.எம்.ஏ.டி,. ஜி.ஆர்.இ.) மூலம் சேர்க்கை வழங்கும் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
அந்த கல்வி நிறுவனத்தில் இருந்து சேர்க்கை கடிதம் பெற வேண்டும். ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சத்துக்கு உட்பட்ட கல்வி கட்டணத்தில் 85 சதவீதம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் மூலமாகவும், 15 சதவீதம் (ரூ.2 லட்சத்து 25 ஆயிரம்) தமிழக அரசாலும் கடனாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த கடன், சேர்க்கை கட்டணம், கல்வி கட்டணம், புத்தகங்கள், எழுதுபொருட்கள், தேர்வு, ஆய்வகம் மற்றும் நூலக கட்டணம், உண்டி மற்றும் உறையுள் கட்டணங்கள் மற்றும் கடன் காலத்திற்கான காப்பீட்டு கட்டணங்கள் உள்ளடக்கியது.
விதிமுறைகள் :
* கல்வி நிறுவனத்திற்கு செலுத்திய தொகையின் அடிப்படையில் கடன் தொகை விடுவிக்கப்படும்.
* முந்தைய ஆண்டுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் தொடர்ந்து கடன் தவணை தொகை வழங்கப்படும்.
* உயர்கல்வி கடன் பெற 21 வயது முதல் 40 வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* 8 சதவீதம் வட்டியாக வசூலிக்கப்படும்.
* கடனை அதிகபட்சமாக 10 வருடங்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும். அதற்கு முன்னதாகவும் கடனை திருப்பி செலுத்தலாம்.
இதற்கான விண்ணப்பப்படிவத்தை www.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மதுரை மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.