
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக வலம் வரும் சூர்யா நடிப்பைத் தாண்டி பல நலத்திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறார். அவரால் 2006-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அகரம் கல்வி அறக்கட்டளை மூலம் இதுவரை பல்லாயிரம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அகரம் அறக்கட்டளையின் நோக்கம் தரமான கல்வியை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு சேர்ப்பதாகும். இந்த அமைப்பின் நிறுவனர் திரைப்பட நடிகர் சூர்யா சிவகுமார்.
இந்தாண்டுடன் அகரம் அறக்கட்டளையைத் துவங்கி 20 ஆண்டுகளும் அதன் விதைத் திட்டம் 15 ஆண்டுகளையும் நிறைவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனைக் கொண்டாடும் விதமாக விதைத் திட்டத்தின் 15-ம் ஆண்டு விழா சென்னையில் கடந்த 3-ம்தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும், சூர்யாவின் குடும்பத்தினர் மற்றும் அகரம் அறக்கட்டளையால் பயன்பெற்ற 8 ஆயிரம் மாணவர்களும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
நிகழ்ச்சியின் போது பங்கேற்ப மாணவர்கள் வறுமையால் வாடிய தங்களின் வாழ்க்கையை அகரம் மாற்றியமைத்ததை சம்பந்தப்பட்டவர்கள் கூறும்போது சூர்யாவும் ஜோதிகாவும் மட்டுமல்ல அரங்கத்தில் இருந்த அனைவரும் கண் கலங்கினர்.
15 ஆண்டுகளில் 8000 ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்பித்து சமூதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில் தொழில் வல்லுநர்களாக மாற்றுவது என்பது அசாதாரண உறுதியும் விடாமுயற்சியும் கொண்ட மிகப்பெரிய சாதனையாகும். இது வெறும் எண்ணிக்கை மட்டுல்ல - ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிய ஒரு சமூக புரட்சியாகும்.
அந்த வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்லூரி படிப்பை வழங்கி வரும் அகரம் அறக்கட்டளையில் சேர்ந்து எப்படி கல்வி உதவித் தொகை பெறுவது என்பதை பார்க்கலாம்.
இந்த அறக்கட்டளையில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வழங்கப்படுகின்றன.
அந்த விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து அனுப்பினால், அதை அகரம் அறக்கட்டளை குழு ஆய்வு செய்து, உண்மையிலேயே அந்த மாணவன் ஊக்கத்தொகை பெறுவதற்கு தகுதியானவன் தானா என்பதை ஆராய்ந்து அவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கலை மற்றும் அறிவியல் அல்லது டிப்ளமோ படிக்க, ஒரு மாணவருக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ 2.5 லட்சத்தையும், மருத்துவம் அல்லது பொறியியல் படிக்க 4 ஆண்டுகள் முதல் 5.5 ஆண்டுகள் வரை ரூ 4.50 லட்சத்தை அறக்கட்டளை ஏற்கிறது.
அகரம் அறக்கட்டளையில் சேர யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், அவர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் ஊரக பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிப்பவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
நடப்பு கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவராக இருத்தல் வேண்டும்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கல்லூரியில் சேர அவர் முதல் பட்டதாரி மாணவராக இருக்க வேண்டியது அவசியம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.
அகரம் ஊக்கத்தொகை பெற தேவையான ஆவணங்கள் :
ஆதார் கார்டு
நிரந்தரமான வீட்டு முகவரி சான்று
ரேஷன் அட்டை
ஜாதி சான்றிதழ்
வங்கிக் கணக்கு
10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதற்கான சான்றிதழ்
விண்ணப்பிக்கும் முறை :
அகரம் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://scholarshipamount.com/www-agaram-in-scholarship/க்கு சென்று அதில் "Agaram foundation scholarship 2025 for college students" என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் தெரியும் விண்ணப்பத்தில் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்கள், புகைப்படத்தை அப்லோடு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
விதை திட்டத்தில் சேர விரும்பி விண்ணப்பிக்கும் ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் பட்டியலும் பொருளாதார தேவையும் கருத்தில் கொண்டே தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்கள் விண்ணப்பத்தில் கூறிய தகவல்கள் உண்மை தானா என்பதையும், நிதி நிலைமையையும் சோதனை செய்ய அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் மாணவர்களின் வீட்டுக்கே சென்று ஆராய்ந்து அதன் பின்னரே மாணர்வகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, இரத்த வங்கியை வைத்திருந்ததை பார்த்துதான் சூர்யாவுக்கு படிக்க கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து அகரம் அறக்கட்டளையை தொடங்கியதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.