
72-வது உலக அழகிப்போட்டி இந்தாண்டு இந்தியாவில் அண்டை மாநிலமான தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கடந்த மே மாதம் 10-ம்தேதி தொடங்கியது. கடந்த ஆண்டும் உலக அழகி போட்டி இந்தியாவில் உள்ள மும்பை மாநிலத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா வெற்றி பெற்று, 71-வது மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்றார். அவர் நடப்பு போட்டியில் (2025)வெற்றி பெறும் புதிய மிஸ் வேர்ல்டு போட்டியாளருக்கு கிரீடம் அணிவிப்பார்.
உலக அழகி போட்டி 1951-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இந்தியா 3-வது முறையாக உலக அழகி போட்டியை நடத்துவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்தியாவை சேர்ந்த 6 பேர் இதுவரை உலக அழகி பட்டத்தை வென்றுள்ளனர். அதாவது ரீட்டா ஃபரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹைடன் (1987), யுக்தமுகி (1999), பிரியங்கா சோப்ரா (2000), மற்றும் மனுஷி சில்லர் (2017) ஆகியோர் கிரீடத்தை வென்று இந்தியாவிற்கு உலகரங்கில் பெருமை சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்து வரும் உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் நடந்தது.
இதில் இந்தியா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 108 அழகிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். உலக அழகிப்போட்டியில் கலந்து கொண்ட அழகிகளுக்கு இடையே விளையாட்டு, தனித்திறமை, நடனப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டதில் 40 பேர் கால் இறுதிப்போட்டிக்கு தேர்வாகினர். இதில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற இந்திய அழகி நந்தினி குப்தாவும் ஒருவர். தனித்திறன் போட்டியில் இந்தோனேசிய அழகி மோனிகா கேசியாவும், நடனப்போட்டியில் இந்திய அழகி நந்தினி குப்தாவும் முதலிடம் பெற்றனர்.
பலகட்டங்களாக நடத்தப்படும் போட்டியில் இறுதியாக 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். போட்டியின் முடிவில் அதிக புள்ளிகள் பெற்ற தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஓபல் சுசாதா சுவாங்ஸ்ரீ இந்தாண்டிற்கான உலக அழகியாக (miss world 2025) தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 2024-ம் ஆண்டின் உலக அழகி கிறிஸ்டினா நீலநிற கிரீடத்தை அணிவித்தார். அவருக்கு அடுத்து 2-வது இடத்தை எத்தியோபியா நாட்டை சேர்ந்த ஆசட் டெரஜியும், 3-வது இடத்தை போலந்து அழகி மாஜா கிளாஜ்டாவும் பெற்றார்.
தாய்லாந்து நாட்டை சேர்ந்த முதல் உலக அழகி பட்டம் வென்றவர் ஓபல் சுசாதா என்பது குறிப்பிடத்தக்கது. 22 வயதாகும் இந்த அழகி தாய்லாந்தில் உள்ள கல்லூரியில் அரசியல் படிப்பு படித்து வருகிறார்.