முன்னணி நடிகராக வலம் வந்த விஜய்யின் அரசியல் கட்சி பெயரில் இருந்த பிழை திருத்தப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்களுக்கு நலப்பணிகளை செய்து வருகிறார். அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பதற்கான அடுத்தடுத்த நகர்வுகளை கடந்தாண்டு முதலே விஜய் தீவிரமாக முன்னெடுத்து வந்தார்.
குறிப்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த 234 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களை நேரில் வரவழைத்து, அவரது கையால் பரிசு வழங்கி கவுரவித்தார். இப்படி அரசியல் நகர்வை ஸ்கெட்ச் போட்டு செய்த விஜய், சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நேரில் சென்று உதவி தொகை வழங்கினார்.
இப்படி அரசியலில் நகர்ந்து கொண்டே வந்த நடிகர் விஜய், திடீரென கட்சி பெயரை அறிவித்து அரசியலில் பகீர் கிளப்பினார். அந்த கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயரிட்டு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
இன்னும் கட்சி கொடி அறிவிக்கப்படாத நிலையில், அந்த கொடி மஞ்சள் சிவப்பு நிறத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் பெயரில் 'க்' வரும் என இலக்கண சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, தற்போது கட்சியின் பெயரை 'தமிழக வெற்றிக் கழகம்' என உபயோகிக்கலாம் என விஜய் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயர் இணையத்தில் டிரண்டாகி வருகிறது.