தவறான சிகிச்சையா? கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம்!

பிரியா
பிரியா

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார் மகள் பிரியா, சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் 15 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார்

கடந்த சில நாட்களுக்கு முன்பு மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தார் ப்ரியா. அங்கு சிகிச்சைக்காக சென்ற பிரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி, அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

பின்னர், காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரிய வந்தது. உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுப்பதற்காக, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது கால் அகற்றப்பட்டது.

Priya
Priya

ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில், சிகிச்சையில் இருந்த மாணவி ப்ரியாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. நேற்று காலை 7.15 மணிக்கு, சிகிச்சைப் பலனின்றி ப்ரியா உயிரிழந்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டு, நேற்று காலை உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்திற்கு என்ன காரணம்? என மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்னர்.

அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மாணவி பிரியாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் காயம் எவ்வாறு உள்ளது என்பதை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் காயம் மேலும் அதிகரித்திருப்பதும், தசை வளர்ந்திருப்பதும் கண்டறியப்பட்டது. அதனால் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு உறுப்புகளும் பாதிக்கப்பட்டது. கல்லீரல் செயலிழந்தது, இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ரத்த அழுத்தம் குறைந்து, டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு சென்றார். அதனால் இரவு முழுவதும் டயாலிசிஸ் செய்யப்பட்டது.

தசை கிழிந்ததால் தசையில் இருந்து வெளிவரக்கூடிய திரவ வடிவிலான ‘மையோகுளோனஸ் என்ற திரவம் வெளியேறத் துவங்கியது. அந்த திரவம் பொதுவாக சிறுநீர் வழியாகதான் வெளியேறும். ஆனால் திரவம் வெளியேற முடியாமல் ரத்தத்தில் கலந்ததால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, சிறுநீரக பாதிப்பு முதலில் ஏற்பட்டு, சிறுநீரகம் செயலிழந்தது. அதனைத் தொடர்ந்து ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழந்த நிலையில் மாணவி பிரியா நேற்று காலை 7.15 மணியளவில் மரணம் அடைந்தார்.

என்ன நடந்தது ?

நகரின் பிரபல மருத்துவமனையின் எலும்பு முறிவு மருத்துவரிடம் பேசியபோது...

 Ligament tear என்று மருத்துவமனைக்கு வந்த பிரியாவிற்கு "arthroscopic ligament repair procedure " செய்யப்பட்டுள்ளது. சர்ஜரிக்குப் பின்னர் compression bandage போட்டிருக்கிறார்கள். சில சமயங்களில் post operative swelling குறைக்க இது செய்வதுதான். ஆனால் கொஞ்சம் அளவுக்கு அதிகமான நேரம் அது அணியப்பட்டதாலோ, அதிக அழுத்தம் காரணமாகவோ, ரத்த ஓட்டத்துக்கு தடை ஏற்பட்டு அடுத்தக் கட்ட காம்ப்ளிகேஷன் வந்திருக்கிறது. இதற்குப் பின் ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு கால் amputate செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, அந்த சர்ஜரி முடிந்து, அதன் பின்னர் multiple organ failureல் இறந்து போகிறாள்,  எக்ஸ்பர்ட் கமிட்டி ஆராயாமல்  மெடிகல் நெங்கிளினஸ்  என்று முடிவு செய்ய முடியாது என்றார்

 சிகிச்சையில்  பிரச்னை?

பிரியாவுக்கு பெரியார் நகரில் நடந்த அறுவை சிகிச்சையின்போது காட்டப்பட்ட அலட்சியமே அவருடைய உயிரை எடுத்திருக்கிறது. இதுபோன்ற அறுவை சிகிச்சைகளின்போது, ரத்தப்போக்கை தடுப்பதற்காக பிரதானமான தமனியைச் (artery) சுற்றி Tourniquet எனப்படும் கயிறு போன்ற பட்டைகள் அழுத்திக் கட்டப்படும். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு இந்த 'டார்னிக்' கழற்றப்படும்.

ஆனால், பிரியாவின் விஷயத்தில் இந்த டார்னிக்கைக் கழற்றுவதில் மருத்துவர்கள் கவனம் செலுத்தவில்லை. இதனால் மிகத் தாமதமாகவே அந்த டார்னிக் அகற்றப்பட்டுள்ளது. நீண்ட நேரம் டார்னிக் கட்டப்பட்டிருந்ததால், காலில் Vascular occlusion எனப்படும் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டது. இதனால், டார்னிக் கட்டப்பட்டிருந்த பகுதிக்குக் கீழே இருந்த செல்கள் அழுக ஆரம்பித்தன.

இந்த நிலையில்தான் அவர் ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு காலை, அழுகிய பகுதிவரை எடுக்க முடிவுசெய்யப்பட்டு எடுக்கப்பட்டது. இதற்குப் பிறகு அழுகிய செல்களை அகற்றும் Debridement treatment எனப்படும் சிகிச்சையும் ப்ரியாவுக்கு நேற்று அளிக்கப்பட்டது.

 ஆனால், சேதமடைந்த தசைப் பகுதியிலிருந்து Myoglobin எனப்படும் புரதம் உருவாகி, ரத்தத்தில் கலக்க ஆரம்பித்தது. இந்த 'மையோக்ளோபின்' சிறுநீரகத்திற்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நச்சுப் புரதம். இந்தப் புரதம் ரத்தத்தில் கலந்ததால், அந்த ரத்தத்தைச் சுத்திகரித்த சிறுநீரகம் செயலிழந்தது. இதையடுத்து கல்லீரலும், அதற்குப் பிறகு இருதயமும் செயலிழந்து மாணவி உயிரிழந்தார்.

உரிய காலத்தில் டார்னிக் அகற்றப்படாததே இந்த ஒட்டுமொத்தப் பிரச்னைக்கும் காரணம் என ராஜீவ் காந்தி மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் பேசியபோது  தெரிவித்திருக்கிறார்.

 மருத்துவர்கள் பணி இடைநீக்கம் செய்யபட்டிருக்கிறார். அரசு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்யபட்டிருக்கிறது.

ப்ரியாவின் மரணத்தை தொடர்ந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ப்ரியாவின் மரணத்திற்கு 10 இலட்ச ரூபாய் இழப்பீடாக அறிவித்துள்ளார். மேலும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் அமைச்சர் ம.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com